நாகர்கோவிலில் வங்கியை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் மீது நாகர்கோவிலை சேர்ந்த அரசு வங்கி மேலாளர் ஷீலா மேனன் கோட்டார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் செல்வகணேஷ், நாகர்கோவில் நகராட்சி ஆணையர் பெயரில் ரூ.2 லட்சம் வங்கி வரைவோலை எடுத்தார். அதை நகராட்சி அலுவலகத்திலும் கொடுத்து விட்டார். ஆனால் அந்த வரைவோலை தொலைந்து விட்டதாக கூறி வங்கியில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து ரூ. 2 லட்சம் பணத்தையும் திரும்ப பெற்றுவிட்டார். வங்கியை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி செய்த செல்வகணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

அதன்பேரில் கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் விசாரணை நடத்தி செல்வ கணேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தினேஷ் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.