கொரோனாவுக்கு உதவும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது போலிஸ் கெடுபிடி

Must read

டில்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வரும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி வி சீனிவாஸ் இடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

நாடெங்கும் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.  இதனால் ஆக்சிஜன், மருத்துவமனைப் படுக்கைகள், மருந்துகள் போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளது.  அதற்கேற்ற அளவு உற்பத்தி இல்லாததால் இவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.   இதையொட்டி  பல தன்னார்வ தொண்டர்கள் உதவிப் பணியில் களம் இறங்கி உள்ளனர்.

இதில் இளைஞர் காங்கிரஸ் மும்முரமாகப் பணி செய்து வருகின்றனர்.   சமீபத்தில் டில்லியில் நியுஜிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதரகங்களில் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.  அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் உதவியை நாடிய போது அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்துள்ளனர்.  இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் மற்றும் அமைச்சர் ஜெய்சங்கர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி வி சீனிவாஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.   இவர் மிகவும் பிரபலமானவராக உள்ளதாலும் இளைஞர் காங்கிரஸ் மூலம் சமூகப் பணிகள் செய்து வருவதாலும் பலரும் இவரிடம் கொரோனா தொடர்பான பல உதவிகள் கேட்டு வருகின்றனர்.    சீனிவாஸ் தன்னிடம் உதவி கேட்போருக்கு உடனடியாக செய்து கொடுக்கிறார்.

இந்நிலையில் சட விரோதமாகப் பல அரசியல் வாதிகள் கொரோனா மருந்துகள் விற்பனை செய்வதாக டில்லி உயர்நீதிமன்றத்தில் தீபக் சிங் என்பவர் புகார் அளித்துள்ளார்.  அது குறித்து விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.  அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் சீனிவாசை அழைத்துச் சென்று கடுமையாக விசாரணை நடத்தி உள்ளனர்.

இது குறித்து சீனிவாஸ் தமக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயத்துக்காக தன்னிடம் தேவை இன்றி விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.     தன்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பெயரை அவர் குறிப்பிடவில்லை.  ஆயினும் தனது அலுவலகத்தில் நடந்த விசாரணையைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் காவல்துறையின் கெடுபிடிக்குப் பயந்து தமது பணியை நிறுத்தப் போவதில்லை என கூறி உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  ”அழிப்பவரை விட காப்பாற்றுபவரே பெரிய மனிதர்” என அவர் சீனிவாசை புகழந்து பதிவிட்டுள்ளார்.

 

More articles

Latest article