டெல்லி: ஜனவரி 26ந்தேதி குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், அங்கு பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள், ராணுவம், காவல்துறை அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். இதனால், பலத்த பாதுகாப்பு போடப்படும். இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் அன்றைய தினம் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதற்கு தடை விதிக்கக்கோரி டெல்லி காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் காவல்துறை தேவையான நடவடிக்கையை எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தியது.
இந்த நிலையில், டெல்லி புறவழிச் சாலையில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் அமைப்பிற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், விவசாயிகள் டிராக்டர் பேரணி குறித்தும், வழித்தடங்கள் குறித்தும் விவசாயிகளுடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால், விவசாயிகளின் டிராக்டர் பேரணி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்று கூறினார். ஆனால், நாங்கள் அந்த வழியில் மட்டுமே டிராக்டர் பேரணி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், நாளை மத்திய அரசுடன் மீண்டும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதையடுத்தே இறுதி முடிவு தெரியும் என கூறப்படுகிறது.