மதுரை:

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மதுரையில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு, கடந்த வருடம் நவம்பர் எட்டாம் தேதி உயர் பண மதிப்பிழப்ப நடவடிக்கையை அறிவித்தது. கறுப்புப்பண ஒழிப்பு, வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியவற்றுக்காக இந்த நடவடிக்கை என அறிவித்தது.

ஆனால் கருப்புப்பணம் ஒழிந்தபாடில்லை. அதே நேரம் கையில் பணம் இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அத்தியாவசிய செலவுக்கே திண்டாட வேண்டி வந்தது. மேலும் இந்த நடவடிக்கையால் தொழில்துறை முடங்கிப்போனது.

இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகள் பலவும் இந்நடவடிக்கையைக் கண்டித்தன. இந்த நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நாளையுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.

இதையடுத்த பல கட்சிகள் இந் நடவடிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. தமிழகத்தின் எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும்… திருச்சி – முதன்மைச் செயலாளர் துரைமுருகன். திண்டுக்கல் – துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி. நாமக்கல் – துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி. திருப்பூர் – துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்..

திருநெல்வேலி – அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தஞ்சாவூர் – டி.ஆர்.பாலு. சேலம் – திருச்சி சிவா, எம்பி ஆகியோர் தலைமயில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் , மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

“பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிக பெருமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘‘கறுப்பு பேட்ஜ்’’ அணிந்து பெருமளவில் கலந்து கொள்ளச் செய்து, போராட்டத்தை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தி.மு.க. தலைமை அலுவலகம் அறிக்கைவிடுத்த்து.

இந்த நிலையில் மதுரையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது மேலும், மேடை அமைக்கும் பணியை தடுத்துள்ளது.