மதுரை: அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி நீதிமன்றம் உடனடியாக விடுதலை செய்ய உத்தர விட்ட நிலையில், என்னை கொல்ல முயன்ற போலீசார் சதி செய்கின்றனர், என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்” சாட்டை துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
நான் பேசியதற்காக என்மீது கைது நடவடிக்கை எடுத்தது, திமுக அரசின் அடக்குமுறை என்றும், பாஜகவை பாசிச கட்சி என்று சொல்லும் நீங்கள் எனக்கு செய்தது என்ன?, என்னை திட்டமிட்டு கொலை செய்ய பார்க்கிறது, எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், மறைந்த திமுகதலைவர் கருணாநிதி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக, குற்றாலம் அருகே திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டது.
இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்த அக்கட்சியின் தலைவர் சீமான், சாட்டை துரைமுருகன் பாடியதை நானும் பாடுகிறேன் என பாடியதுடன், என்னை கைது செய்து பாருங்கள் சவால் விட்டார்.
இதற்கிடையில், தென்காசியில் கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சுவாமிநாதன் முன்பு நேற்று (வியாழன்) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பு வாதங்கள் மற்றும் சாட்டை முருகன் தரப்பு வாதங்களை கேட்டறிந்த திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன், சாட்டை துரைமுருகனை விடுவித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சாட்டை துரைமுருகன், “என் மீது 11 வழக்குகள் போட்டு இந்த அரசு முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் இது அப்பட்டமான பொய் வழக்கு எனவும், நாங்கள் 14 ஆண்டு காலமாக பட்டியலின மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்கிறோம் எனவும், என் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தை போட்டு அரசு முடக்க நினைக்கிறது என்ற வாதத்தை முன் வைத்தோம். இது சட்டத்திற்கு புறம்பான வழக்கு, நான் பாடிய பாடல் என்பது அதிமுக 31 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரங்களில் பாடக்கூடிய பாடலாகும்.
அதை நான் மேற்கோள் காட்டினேன், குறிப்பாக பட்டியல் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறியது அப்பட்டமான பொய், நானே சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளேன், என் பிள்ளைகளுக்கு இதுவரை சாதி சொல்லாமல் ‘தமிழர்’ என்று சொல்லி வளர்த்து வருகிறேன்.
மேலும், நான் பாடியதில் குறிப்பிட்ட வார்த்தை இழிவான சொல் என்று எனக்குத் தெரியாது. அந்த வார்த்தையை பயன்படுத்தியதாக என் மேல் வழக்கு போட்டார்கள். ஆனால், நீதிபதி இந்த வழக்கு செல்லாது எனக் கூறி, இதில் முதல் தகவல் அறிக்கை போடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். யாருமே பேசக்கூடாது என்று சொல்வது அப்பட்டமான அடக்குமுறையாகும். பாஜகவை பாசிச கட்சி என்று சொல்லும் நீங்கள் எனக்கு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் எனக்கு எந்த சம்மன் கொடுக்கப்படவில்லை, குற்றாலத்தில் தங்கியிருக்கும் போது காவல்துறையினர் என்னை கைது செய்தனர். இந்த வழக்குக்கும், என் செல்போனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. என் செல்போனைப் பறித்துக் கொண்டு என்னை எனது காரிலேயே அழைத்து வந்தனர். அப்போது திட்டமிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் விபத்து ஏற்படுத்தினார்கள். மீண்டும் மதுரை அருகில் விளாங்குளம் என்ற டோல்கேட் பக்கத்தில் காவலர் கொண்டு கார் மீது மோதினார், பின்னாடி லாரி வந்து என் கார் மீது மோதியது.
அதில் எனக்கும், என்னுடைய ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. முழுக்க முழுக்க இந்த அரசாங்கம் என்னை கொலை செய்ய பார்க்கிறது. இந்த திமுக அரசால் எனக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றம் எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.