ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி மேற்குவங்க மாநிலம் கரக்பூரில் ஐஐடி சார்பில் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, பேசிய பிரதமர் மோடி மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டுப்பிடிக்கப்பட்ட கண்டுப்பிடிப்பை மறைமுகமாக ராகுல்காந்திக்கு ஒப்பிட்டு கேலியாக பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு மாற்றுத்திறனாளிகளிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “02.03.2019 அன்று மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் மத்திய அரசின் இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காட்சிவழி வாயிலாக உரையாடினார்.
Dyslexia என்ற கற்றல் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக் கூடிய வகையில் ஐஐடி மேற்கொண்டு வரும் ஆய்வு திட்டத்தை மாணவி திஷா ஹரியால் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது இடைமறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘அப்படினா அது 40,50 வயதுள்ளவர்களுக்கும் பயன்படும் தானே’ என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பெயர் குறிப்பிடாமல் கேலி செய்தார். மேலும், அவரின் அம்மாவும் மகிழ்ச்சியாக இருப்பார் அல்லவா என சோனிய காந்தியின் பெயரையும் குறிப்பிடாமல் மோடி கேலி செய்தார். நரேந்திர மோடியின் கேலி, கிண்டலை திஷா ஹரியால் மாணவியுடன் இருந்த சக மாணவர்கள் கிண்டலடித்து கைதட்டி ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகள் குறித்து மாணவி திஷா ஹரியால் பேசிக் கொண்டிருந்த போது, அதனை கனிவோடு கவனித்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை இழிவுப்படுத்தி அரசியல் நையாண்டிக்கு பயன்படும் வகையில் அரசு பொது நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் அப்பட்டமாக சட்ட விரோதமாக நடந்து கொண்டது பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். திரு. நரேந்திர மோடி அவர்களின் செயல் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மன வேதனையை உருவாக்கியுள்ளது.
இது குறித்து எமது சங்கம் பத்திரிகை வாயிலாக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளோம். அதில் திரு. நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய குற்றத்திற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என கோரியிருந்தோம். ஆனால் 06.03.2019 மாலை 3.00 மணி வரை திரு.நரேந்திர மோடி அவர்கள் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை.
எனவே, தாங்கள் இந்த புகாரை பெற்று விசாரணை செய்து சட்ட ரீதியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் “ என பிரதமர் மோடிக்கு எதிரான புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.