மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் தண்டிக்கவும் போதுமான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 6 மல்யுத்த வீரர்கள் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது.
மல்யுத்த வீரர்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படுவதில் ஆதாரம் ஏதும் இல்லை என்று பிரிஜ் பூஷன் தரப்பு கூறிவந்தது.
இந்த நிலையில், அத்துமீறில் தொடர்பான புகைப்பட ஆதாரம் மற்றும் மொபைல் தரவுகள் அடிப்படையில் அவர் சம்பவ இடத்தில் இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
வருகை பதிவேடு, சிசிடிவி போன்றவை இந்திய மல்யுத்த சம்மேளன அலுவலகம், பிரிஜ் பூஷன் இல்லம் மற்றும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடங்களில் இல்லாத நிலையில் மொபைல் தரவுகள் மற்றும் புகைப்பட ஆதாரம் ஆகியவை தொழில்நுட்ப ஆதாரமாக உள்ளது.
புகார் அளித்தவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் மற்றும் அன்றைய மொபைல் போன் தரவுகள் மற்றும் மொபைல் டவர் தரவுகளைக் கொண்டு விசாரணை நடத்தியதாகவும் தங்களிடம் உள்ள நான்கு புகைப்படங்களில் 2 புகைப்படங்கள் பிரிஜ் பூஷன் அத்துமீறியதற்கான ஆதாரம் தெளிவாக உள்ளதாக கூறியுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களை பின்தொடர்தல் போன்ற குற்றங்களுக்காக பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்கவும் இ.த.ச. 506, 354, 354A மற்றும் 354 D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டிக்க போதுமான ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது.