சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைத்தே தீருவோம் திமுக அரச கூறி வரும் நிலையில், தங்களது விளை நிலத்தையும், ஊரையும் அழித்து விமான நிலையம் அமையக்கூடாது என பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டை கடந்தும் போராடி வருகின்றனர். இந்த நிலையில், அரசின் நடவடிக்கையை எதிர்த்து போராடும் கிராம மக்கள் மீது முதன்முறையாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 220 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சுற்றுவட்டார பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதியிலுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து 4791 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800 -க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி, குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 346 வது நாளாக பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், திமுக அரசு, கிராம மக்களை கண்டுகொள்ளாமல், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. கிராம சபை கூட்டங்களில் 6 முறை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். ஆனால், அதை கண்டுகொள்ள திமுக அரசு, பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் ஐஐடி அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த குழுவினர் பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் கள ஆய்வு மேற்கொள்ள சென்றனர். ஆனால், அந்த ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், அதிகாரிகள் குழு, பொதுமக்களிடன் உண்ணாவிரதபோராட்டதை கண்டுகொள்ளாமல், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் மற்றொரு வழியாக, சென்று ஆய்வு மேற்கொண்டனர். விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய், மேல்பொடவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனால் ஏகனாபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, அங்கு 300- க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் மதுரமங்கலம் பகுதி வரை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பேரணியில் வந்த கிராம மக்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
இதையடுத்து, முதன்முறையாக, ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அனுமதி இல்லாமல் பேரணியில் ஈடுபட்டதாக சுமார் 200 பேர் மற்றும் நாகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20 நபர் என 220 கிராம மக்கள் மீது IPC 143, 341, 188 என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.