ஜெய்பூர்:
‘‘பாலியல் பலாத்காரத்தை தடுக்க ஒவ்வொரு வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போட முடியாது’’ என்று பாஜ அமைச்சர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காலிசரண் ஷராப், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு வீட்டின் முன்னும் போலீஸ் பாதுகாப்பு போட முடியாது என பேசியது சர்ச்சையாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியள காலிசாரான் ஷராப் “ஒவ்வொரு வீட்டின் முன்னும் நாங்கள் போலிசை பாதுகாப்புக்கு நிறுத்த முடியுமா? காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறவில்லையா?” என தெரிவித்துள்ளார்.
ஜே லோனே மருத்துவமனையில் பாலியல் பலாத்காரத்தால் பாதித்த சிறுமியை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்தபோது ஷராப் இவ்வாறு பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதை காங்கிரஸ் அரசியலாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஷராப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து உள்ள சச்சின் பைலட் கூறுகையில்,‘‘ இது ஒரு பொறுப்பற்ற பதில். இதுபோன்ற வார்த்தைகள் அமைச்சரிடம் இருந்து வருவது குற்றவாளிகளை ஊக்குவிக்கும் செயல். அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.