சென்னை
சென்னையில் நேற்று பிரதமர் மோடி கலந்துக் கொண்ட நிகழ்வின் போது கருப்பு நிற முக கவசங்கள் அணிய காவல்துறை தடை விதித்தனர்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பல மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அவற்றில் ஒன்றாகச் சென்னை நகரில் மெட்ரோ ரயில் விரிவாக்கமும் தொடங்கப்பட்டது. இதில் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
கடந்த 2018 ஆம் வருடம் மோடி தமிழகத்துக்கு வந்த போது அவருக்கு எதிராகக் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடந்தது. மேலும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு முறை கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன தற்போது சமூக வலைத்தளங்களில் #கோபேக்மோடி என்னும் ஹேஷ் டாக் வைரலாகியது. இதையொட்டி தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
மோடியின் நிகழ்வில் கலந்து கொண்டோரில் கருப்பு முகக் கவசம் அணிந்து வந்தோரிடம் இருந்து முக கவசங்களை அகற்றக் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த நிகழ்வில் கருப்பு முகக் கவசம் அணிய தடை விதிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட சிலர் கருப்பு முக கவசம் அணிந்து நிகழ்வு நடந்த நேரு அரங்கினுள் சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு முக கவசத்தை எடுத்த பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.