கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.
கிருமண மண்டபத்தின் முன்பு அவர் சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். பிறகு திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு கால்களையும் வாரி கீழே தள்ளினார். தடுமாறி தரையில் சாய்ந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முகத்தில் குத்தினார். கன்னத்தில் அறைந்தார்.
வாலிபரின் கையில் இருந்த மோதிரம் அவரது உதட்டை கிழித்தது.
இந்தத் தாக்குதலில் பன்னீர்செல்வம் நிலைகுலைந்தார்.
எதிர்பாராத இந்த சம்பவத்தை கண்டு திடுக்கிட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். அதோடு அவரை தாக்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.
காயமடைந்த எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை உடனடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர், வீடு திரும்பினார்.
இதற்கிடையே அங்கு நிறுத்தப்பட்டிருந்த எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் விசாரணை நடத்தினர். எம்.எல்.ஏ.வை தாக்கிய இளைஞர் போளூரை சேர்ந்த நடராஜன் மகன் வசந்தமணி (வயது 39)என்பது தெரியவந்தது.
இவர் மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கட்சி பணிகளுக்கு வசந்தமணி மேடை அலங்காரம் செய்துள்ளார். இதற்கு உரிய பணத்தை எம்.எல்.ஏ. தரவில்லை. பலமுறை கேட்டும் எம்.எல்.ஏ. கண்டுகொள்ளாததால், இந்தத் தாக்குதலில் அவர் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வசந்தமணியை கைது செய்துள்ளனர்.