நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
கவிஞர்களே வியந்த மக்கள் கவிஞன்..
“எத்தனை காலம் மனிதன்
வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை..
அவன் எப்படி வாழ்ந்தான்
என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வி இல்லை..”
வாலியின் இந்த வைர வரிகள் கச்சிதமாக பொருந்துபவர்களில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை தவிர்க்கவே முடியாது.
பாட்டு எழுதியது, நாலே வருஷம். பல்லாயிரம் பாடல்களெல்லாம் என்றில்லை, சுமார் 200 தான். இந்தக் கவிஞனை பார்த்து ஆனானப்பட்ட கவியரசர் கண்ணதாசனே வியந்து போய் இருக்கிறார் என்றால் அதைவிட வேறு என்ன சொல்வது?
“கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு..
கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு.
பழங்கதைகளை பேசி காலம் வீணா போச்சு..
இந்தத் திண்ணைப்பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி “
– சிவாஜியின் பதிபக்தி(1958) படத்திற்காக பட்டுக்கோட்டை தெறிக்கவிட்ட வரிகள் இவை..
பொதுவுடமை மற்றும் பகுத்தறிவு.. இந்த இரண்டும்தான் கல்யாணசுந்தரம் பாடல்களின் அச்சாணிகள்…
1955-ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கல்யாணசுந்தரம் சிவாஜிக்காக பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாட்டு எழுதினார். எம்ஜிஆருக்கோ வெறும், ஏழு படங்கள்.
1957-சக்ரவர்த்தி திருமகள், மகாதேவி, புதுமைப்பித்தன் என மூன்று படங்கள். நாடோடிமன்னன்(1958)..
திருடாதே (1961), அரசிளங்குமரி(1961) விக்ரமாதித்தன்(1962), கலையரசி(1963).. இந்த நான்கு படங்களுமே 1959-ல் கல்யாணசுந்தரம் திடீரென மறைந்த பிறகு வெளிவந்த திரைப்படங்கள்..
எம்ஜிஆர் படங்களுக்கு கண்ணதாசனும் வாலியும் பின்னாளில் புலமைப்பித்தன ஏராளமான படங்களுக்கு அரசியல் மற்றும் தத்துவ பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்..
ஆனால் எல்லோரையும் விட எம்ஜிஆர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டது பட்டுக்கோட்டையை மட்டுமே..
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எம்ஜிஆர் சொன்னார். ”நான் அமர்ந்துள்ள சிம்மாசனத்தை தாங்கிப்பிடிக்கும் நான்கு கால்களில் ஒன்று, மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினுடையது” என்று..
உண்மையிலேயே அப்படித்தட்ட புரட்சிகரமான தளத்தை எம்ஜிஆருக்கு சினிமாவில் அமைத்துக்கொடுத்தவன், பட்டுக்கோட்டை என்பது மறுக்க முடியாத உண்மை ..
சக்ரவர்த்தி திருமகள் படத்தில், “மனுஷன் பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது” பாடலில்,
“புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால்
நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் –
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா”
இப்படி சமூகத்தின் யோக்கியதையை பிரித்து மேய்ந்தான் பட்டுக்கோட்டை.
அதே படத்தில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுடனே எம்ஜிஆர் சபையில் விவாதம் செய்யும் ஒரு கேள்வி-பதில் பாட்டு..
கோவிலை கட்டி வைப்பது எதனாலே?.. கேட்பார் என்எஸ்கே.
சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே என்பார் எம்ஜிஆர். (கடவுள் அவுட்)
அன்னசத்திரம் இருப்பதெதனாலே?
பல திண்ணை தூங்கிப் பசங்க இருப்பதாலே ?
பரதேசியாய்த் திரிவதெதனாலே?
அவன் பத்துவீட்டு சோறுருசி கண்டதாலே.. (சோம்பேறிகளை உருவாக்கும் வழிமுறைகளுக்கு செருப்படி)
இதே பாடலில்தான் கடைசியாக உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது என்ற கேள்விக்கு,
நிலை கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு என்று முடித்திருப்பார் பட்டுக்கோட்டையார்..
யோசித்துப் பாருங்கள் பட்டுக்கோட்டையின் மூளைக்குள் எந்த அளவுக்கு உழைப்பு,பொதுவுடைமை பகுத்தறிவு போன்ற விஷயங்கள் மூழ்கிப்போய் இருக்க வேண்டும்!!
அதே 1957-ம் ஆண்டின் இன்னொருபடமான மகாதேவியில், தாயத்து தாயத்து என்றொரு பாடல்.
“உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில் உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு?”
என சவுக்கால் அடித்தான் அந்த கவிஞன்.
இதன்பின்னர் பட்டுக்கோட்டையை எம்ஜிஆர் விடுவதாக இல்லை. தொடர்ந்து தன்னுடைய படங்களில் அவரை பிரச்சார களத்திற்கு
அருமையாக பயன் படுத்திக்கொண்டார்ர்.
தூங்காதே தம்பி தூங்காதே..
காடுவௌச்சென்னா மச்சான் நமக்கு கையும்காலும்தானே மிச்சம்.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா என வரிசையா போன கவிஞன்,
திருடாதே படத்தில் முத்தாய்ப்பாய் திருடாதே பாப்பா திருடாதே என ஆரம்பித்து, “திருடராய் பார்த்த திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று பொட் டில் அறைந்தார்போல் உண்மையை தீர்க்கமாக சொல்லி முடித்தான்.
“உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது..
மனம் மேலும் கீழும் புரளது”
அதே பாடலில் பட்டுக்கோட்டையார் சொன்ன இன்னொரு அற்புதமான உண்மை.
இன்றுவரை அதேதானே நிலைமை.. எந்த வகையான திருட்ட, சட்டம் போட்டு நாம் முழுவதுமாக ஒழித்திருக்கிறோம்?
பணத்துக்காக, ஆட்களுக்காக என எதையும் பாராமல் அடித்தள வர்க்கத்தின் வார்த்தைகளை கொட்டிய அருவி அவன். அதனால்தான், குறுகிய காலத்தில் மக்கள் கவிஞன் என்று பெயரடுக்க முடிந்தது.
பட்டுக்கோட்டையை பொறுத்தவரை புரட்சிகரம் மட்டுமல்ல, காதல், வீரம் சோகம், தத்துவம் நகைச்சுவை என எல்லா தளங்களிலும் எளிமையாக இயங்கிவன்
காதலன் கையை தொட்டதற்கே,, “பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ..
நான் கருங்கல்லு சிலையோ காதலெனக்கில்லையோ?” என பெண்மையின் மென்மையான கண்டிப்பை நயமாக உரைத்த கல்யாணபரிசு பட பாடல்..
பட்டுக்கோட்டையை பற்றி ஸ்ரீதர் குறிப்பிட்டுச் சொன்னதை இங்கே கண்டிப்பாக நினைவு கூர்ந்தாகவேண்டும். கல்யாணப்பரிசு படக்கதையை தனது மனதுக்குள்ளேயே போட்டுக்கொண்டு பல மாதங்களாக அணுஅணுவாய் செதுக்கி வைத்திருந்தார் இயக்குனர் ஸ்ரீதர்.
பாடல்களை எழுதுவதற்காக கல்யாணசுந்தரத்தை அணுகி படத்தின் கதையை நீண்டநேரம் விவரித்தார் ஸ்ரீதர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ப்பூ.. இவ்வளவுதானா என்று,
“காதலிலே தோல்வியுற்றால் கன்னி ஒருத்தி
கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி..”
– இரண்டே வரிகளில் படத்தையே அடக்கி காட்டினான் பட்டுக்கோட்டை..
ஏராளமான பாடல்களில் சீரியஸ் தனத்தை காட்டினாலும் குறும்பு வைத்து எழுதுவதிலும் பட்டுக்கோட்டை செம கில்லாடி..
கையில வாங்கினேன் பையில போடலே காசு போன இடம் தெரியலை..
காதலி பாப்பா காரணம் கேப்பா,,
என, யதார்த்த பொருளாதார பாடலில் பாப்பா என்கிற வார்த்தை மூலம், தமிழ்திரையுலகின் ஜாம்பவானின் எக்ஸ்ட்ரா சமாச்சாரத்தை நாசுக்காக கலாய்த்த அந்த துணிச்சல், வேறு யாருக்கு வரும்?
எழுதிய பாட்டுக்கு பணம் தராமல் இழுத்தடித்து காத்துக்கிடக்கும்படி நிற்கச்சொன்ன இன்னொரு பெரிய சினிமா ஜாம்பாவனுக்கு,
”தாயால் வளர்ந்தேன் தமிழால் அறிவு பெற்றேன்
நாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்
நீ யார் என்னை நிற்கச்சொல்ல?”
என்று துண்டுசீட்டில் எழுதி துப்பிவிட்டு போன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் தன்மான வரலாறு, தமிழ் சினிமா உலக வரலாற்றில் பலருக்கும் மனப்பாடம். பெரும்பாடம்,
வாழ்க்கையே இவ்வளவுதாண்டா என்று பாசவலையில்…
குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம் ,
குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம் ;
தட்டுக் கெட்ட மனிதன் கண்ணில் பட்டதெல்லாம்
சொந்தம் ., சட்டப்படி பார்க்கப் போனா எட்டடி தான் சொந்தம் ! “
என்று பேராசைகாரர்களை போட்டு பொளந்த விதம்.. அதையெல்லாம் விவரிக்கவே முடியாது.
1959-ல் கண் திறந்தது என்றொரு படம். நடிகை மனோரமாவின் கணவனான ராமநாதன் கதாநாயகனாக நடித்தது. அதில் கழுதை மீது அமர்ந்து கொண்டு சிறுவன் பாடி கொண்டு வருவான்..
“எழுத படிக்க தெரியாதவன்
உழுது உழைச்சு சோறு போடுறான்…
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி நல்லா நாட்டை கூறு போடுறான்…
அவன் சோறு போடுறான்
இவன் கூறு போடுறான்”
எவ்வளவு எளிமையாக சமூகத்தை காட்டிவிட்டான் பட்டுக்கோட்டை !
29 வயதிலேயே இயற்கை அவனை திரும்பப் பெற்றுகொண்ட போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துபோனது. ஏனெனில் பாமரர்களின் வாயில் அடிக்கடி முணுமுணுப்பானது அவன் பாடல்கள்தானே
அவன் இறந்த பிறகு படங்களில் இடம்பெற்ற பாடல்களை கேட்டவர்களெல்லாம், படுபாவி இவ்வளவு சின்னவயசுல போயிட்டியேடா என்று ஒவ்வொரு முறையும் கொட்டகைகளில் அழுதார்கள்
சென்ற நூற்றாண்டு தமிழர்களில் அதிசயப்பிறவிகள் பாரதியும் பட்டுக்கோட்டையும்,, இருவருமே இள வயதில் கரைந்துபோனார்கள். ஆனால் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதில் வித்தகர்கள் ஆனார்கள்.
கல்யாண சுந்தரத்தின் 62-வது நினைவு நாளையொட்டி நேற்று பதிவு போட முடியாததால் இன்று போடுகிறோம்.