தன்னம்பிக்கைக்  கவிதை – பகுதி 2

சிவப்புக் கம்பளம்

பா. தேவிமயில் குமார்

 

விழித்திருக்கும் நேரமெல்லாம்

  விருப்பத்துடன் உழைத்திடு,

  உன் இலக்கினை நோக்கி

  அடிகளை வைத்திடு !

முன்னேற்ற எண்ணங்களும்

  முடிவிலா ஆசைகளும்

  தொடரோட்டம் போல

  தோன்றிக்கொண்டே இருக்க வேண்டும் !

எதிர் மறையான

  எண்ணம் கொண்டவர்களின்

  எதிரில் கூட நிற்காதே !

  அவ்விடத்தை விட்டு

  அகன்று விடு, அதுவே விடுதலை !

அவமானத்தைப் பார்க்காத

  ஆட்கள் யாருமேயில்லை,

  சமுதாயம் எட்டி உதைத்த

  சாதாரண மனிதர்களே

  இன்று…..

  இங்கு மட்டுமல்ல,

  உலகம் முழுவதும், சாதித்துள்ளார்கள் !

உன்னை நிராகரித்த

  உறவுகளும், நட்புகளும்,

  உன் சாதனைக்குப் பிறகு

  உறவென்று ஓடி வருவார்கள்,

  அது வரை அமைதியாயிரு !

சிவப்புக் கம்பளம்

  சிரித்தபடி உனக்காகவே

  காத்திருக்கிறது, உன்

  காலடிகள் பட தவமிருக்கிறது,

  காலம் கடத்தாதே, வா !

விட்டுக்கொடுத்தல் என்பது

  வாழ்க்கையில் முக்கியமே !

  ஆனால்….

  வெற்றியை விட்டுத்தராதே

  வீறுகொண்டு, உழைத்திடு !

வாழ்த்துக்களையும், நல்ல

  வார்த்தைகளையும் மட்டுமே

  கேட்டுப் பழகிடு, அதுவே

  கனிவான வாழ்க்கைப் பாதையை

  காட்டிடும் உனக்கு !

அன்று,

  நிராகரிக்கப்பட்டவர்களின்

  நீண்ட பெயர்ப் பட்டியல் தான்

  இன்று

  சாதனை மனிதர்கள் இவர்களென

  சரித்திரம் படித்துக் காட்டுகிறது !

ஒரு கல்லைத்தான்

  செதுக்கிட சிற்பி தேவை,

  உன் உள்ளத்தினை

  செதுக்கிட யாரும் தேவையில்லை,

  சிற்பியும் நீயே, சிலையும் நீயே !

இனிப்பைத்தான் ஈக்கள் மொய்க்கும்

  இரும்பினை அல்லவே !

  உழைப்பை நம்பிடு,

  உன்னைப் போன்ற

  வலிமையான மனிதன்

  உலகில் யாருமில்லை !

எவரிடம் வேலை கேட்பது

  என யோசிக்காதே !

  யாருக்கு வேலை கொடுக்கலாம்

  என யோசித்தபடியிரு !

  உன் சிந்தனை எல்லையை

  உலகமெலாம் சிறகடிக்க விடு !

நாளைய பொழுது மட்டுமல்ல

  நாளைய உலகமும் உனதாகும் !