ஹரித்வார் சண்டிதேவி கோவில், பழனி முருகன் கோவில் போன்ற புண்ணியத் தலங்களில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து விரைவாக மலைக்கோவிலிலுக்கு செல்ல ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மூலம் 3 நிமிடத்தில் மலைக்கோவிலை அடைந்து விடலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதை விரும்புவர். இது குறைந்த தூரச் சேவையாகும்.
ரோப்கார் சேவைப் போன்ற ஆளில்லா போட் டாக்ஸி அதாவது ஓட்டுனரில்லா வாகனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது என்பது கனவாகவெ இருந்து வந்தது. தற்பொழுது இந்தக் கனவு நனவாக வுள்ளது. இந்தச் சேவை குர்கானில் கூடிய விரைவில் தொடங்கவுள்ளது.
போட் கார்ஸ் எனும் தனிப்பட்ட விரைவு போக்குவரத்து ஒரு பொது போக்குவரத்து முறை ஆகும். போட் கார்ஸ் எனும் இந்தச் சிறிய தானியங்கி வாகனங்கள் அதற்கென சிறப்பாகக் கட்டப்பட்ட வழித்தடத்தில் செயல்படும். இது நமது பழனியில் உள்ள ரோப் கார் போன்ற தானியங்கி வழிகாட்டி போக்குவரத்து.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியாவின் முதல் தனிப்பட்ட விரைவு போக்குவரத்திற்கான அடிக்கல்லை நாட்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான உலகளாவிய ஏலத்தொகையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அழைக்கவிருக்கிறது.
13 கிமீ நீளமுள்ள இந்தத் திட்டம் குர்கான்-தில்லி பார்டரிலிருந்து சோனா ரோட்டில் உள்ள பாத்ஷாபூர் மோட் வரை 850 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படவுள்ளது.
போட் கார் எனும் இந்த வாகனம் மேல்நிலை ரயிலின் மூலம் தொங்கவிடப்பட்டு இயக்கப்படும்.ஒவ்வொரு வண்டியிலும் ஐந்து நபர்கள்வரை பயணிக்கலாம். ஆம்பியன்ஸ் மாலிலிருந்து ஆரம்பித்து மொத்தமாக 16 நிலையங்கள் வைக்கலாமெனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே பயணிகள் இறங்கி ஏறும் வசதிகள் மட்டுமல்லாமல் மொத்தமாக ஒரு போட் காரைத் தான் செல்லும் இடத்துக்கு மட்டும் அதாவது வேறெங்கும் நிறுத்தாமல் சென்றடையலாம். ஒரு போட் காரினுடைய சராசரி வேகம் மணிக்கு 60 கி.மீ. ஆகும்.
ஒப்பந்தம் போடப்பட்ட ஒரு வருடத்திற்குள் இந்த போக்குவரத்துத் தடத்திற்கான கட்டுமானப்பணி முடிவடைந்துவிடுமென இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உயரதிகாரி கூறினார். மேலும் இதைப் பற்றி அவர் கூறுகையில் ” போட் கார் முறை மிகவும் சிறந்தது இருந்தாலும் தனியார் நிறுவனங்கள் ஸ்கைரயில், ரோப் கார் போன்ற புதிய லாபகரமான யுக்திகளோடு வந்தால் அதை ஏற்கவும் நங்கள் தயாராக உள்ளோம்”.
இந்தத் திட்டத்திற்காகத் தேவைப்படும் நிலம் ஏற்கனவே அவர்களிடத்திலும் ஹரியானா அரசு ஏஜன்சீஸிடத்திலும் உள்ளதென இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உயரதிகாரி கூறினார். இதற்காகக் காடுகளையோ மரங்களையோ சுற்றுச்சூழலையோ அழிக்கவேண்டுமென அவசியமில்லை. இதற்கான மொத்த முதலீடும் போட் கார் அமைத்துத்தர போகும் அந்தத் தனியார் நிறுவனத்தினுடையது. ஒப்பந்தத்தின் படி, 25 வருடத்திற்கு பயணச்சீட்டு மூலம் பணம் வசூலித்துப் போட்ட முதலை திரும்ப எடுத்துக்கொள்ளும் அந்த நிறுவனம்.
தில்லியிலிருக்கும் தௌலா க்வானுக்கும் மனேசாருக்கும் இடையே மெட்ரினோஸ் இயங்குமென மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நித்தின் கட்காரி கடந்த வருடம் அறிவித்தார். இதற்கான் மேல்நிலை பாதைகள் திட்டமிடப்பட்டு வந்தன. இதற்கிடையில் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மஸ்டார் நகரில் போட் காரில் பயணம் செய்தபோது அதனுடைய அம்சங்களைக் கண்டு வியந்தார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதிப்பீட்டின் படி ஒரு கிலோமீட்டர் மெட்ரோ உருவாக்க 250 கோடி ரூபாயும், மோனோரயில் பாதை அமைக்க 200 கோடி ரூபாயும், மெட்ரினோவைக் கட்ட வெறும் 70 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். மேலும் மெட்ரினோ இலகுவானதும் கூட.
“கூடிய விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் முடிவடையும். பின்னர் இது தௌலா குவானிலிருந்து மனேசாருக்கும் நீட்டிக்கப்படலாம்” என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி கூறினார்.