பரத்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் குறைக்க கடும் தண்டனைகள் கொண்ட போக்சோ சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்க வேண்டிய ஒரு நீதிபதி மீது இதே சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்ட அவலம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் பரத்பூர் மாவட்டத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜிதேந்திர சிங் கோலியா என்பவர் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவரும் இவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்களும் டென்னிஸ் விளையாட்டு அரங்கு ஒன்றில் அறிமுகமான 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் நீதிபதி ஜிதேந்திர சிங் கோலியா மீதும் அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறார் வன்கொடுமை தடுப்புச்சட்டமான போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.