ஐதராபாத்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த நிரவ் மோடி மோசடியை அடுத்து வங்கியில் உள்ளவர்கள் பணம் பத்திரமாக இருக்க ஐதராபாத் கோவிலில் விசேஷ பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி திருப்பித் தராமல் நாட்டை விட்டு ஓடி விட்டது தெரிந்ததே. தற்போது ரோடோமேக் பேனா நிறுவன அதிபர் கோத்தாரி கடன் வாங்கிவிட்டு திருப்ப செலுத்தவில்லை என புதிய செய்திகள் வந்துள்ளன. அத்துடன் ஏற்கனவே நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா விவகாரமும் இன்னும் முடியவில்லை. இதனால் வங்கியில் பணம் டிபாசிட் செய்துள்ள சாதாரண மக்கள் பலரும் தங்கள் பணம் என்னாகுமோ என்னும் பயத்தில் உள்ளனர்.
அந்த மக்களில் சிலர் தங்களுக்கு இனி கடவுள் தான் உதவ வேண்டும் என்னும் நிலைக்கு வந்துள்ளனர் என தோன்றுகிறது. ஐதராபாத் நகருக்கு சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ள சில்குர் பாலாஜி கோவிலில் பல பக்தர்கள் வங்கிகளில் உள்ள சாதாரண மக்களின் பணத்தை காப்பாற்ற விசேஷ பிரார்த்தனை செய்துள்ளனர்.
இந்த சில்குர் பாலாஜி கோவிலானது விசா பாலாஜி கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. ஐதராபாத் அருகில் அமைந்துள்ள இந்த கோவிலை பக்த ராமதாசரின் உறவினரான மாதண்ணா மற்றும் அக்கண்ணா கட்டி உள்ளனர். இந்தக் கோவிலில் கூடிய பக்தர்கள் வேத புரோகிதர்களுடன் இணைந்து நரசிம்மர் சுலோகத்தை ஜெபித்தனர். அதனால் கடவுள் சாதாரண மக்களின் வங்கிப் பணத்தை காப்பாற்றிக் கொடுப்பார் எனவும் ஏமாற்றியவர்கள் இடம் இருந்து வங்கிகள் பணத்தை திரும்பப் பெற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தலைமை புரோகிதர் சௌந்தரராஜன், “இந்த கோவில் பற்றி அமெரிக்கப் பத்திரிகைகளில் எழுதப் பட்டுள்ளது. முன்பு ஆந்திரா மாநிலம் மின்சாரம் இன்றி தவித்த போது இங்கு மக்களின் துயர் தீர்க்க பிரார்த்தனை நடைபெற்று அந்த வேண்டுகோளை கடவுள் நிறைவேற்றினார். இப்போதும் நல்லெண்ணத்துடன் தங்கள் பணத்தை வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள மக்களுக்கு ஏதும் இழப்பு வராமல் இருக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. கடவுள் எங்களுடைய இந்த வேண்டுகோளையும் நிக்கயம் நிறைவேற்றுவார்” என தெரிவித்துள்ளார்.