உல்லாஸ் நகர், மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் தங்கள் மகனின் பிணத்துடன் பெற்றோர் போராட்டம் நடத்தி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகரில் கணேஷ் காம்ளே என்னும் நபர் வசித்து வந்தார். அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அவருடைய வங்கிக் கணக்கில் ரூ. 25000 இருந்தது. திடீர் என கணேஷ் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருடைய பெற்றோருக்கு அவருடைய சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டுள்ளது.
வங்கியில் சென்று தங்கள் மகனின் கணக்கில் உள்ள பணத்தை கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட பெற்றோருக்கு வங்கி மேலாளர் பணம் தர மறுத்து விட்டார். கணக்கு வைத்திருப்போரின் கையெழுத்து இல்லாமல் வங்கிச் சட்டப்படி பணம் தர இயலாது என கூறி விட்டார். இதனால் கணேஷின் தந்தை அடிக்கடி சென்று மேலாளரிடம் கெஞ்சி உள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார்.
கடைசியாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் தனது மகனின் புகைப்படத்தைக் காட்டி பணம் கொடுத்து கணேஷைக் காப்பாற்றுமாறு அவர் தந்தை அழுதிருக்கிறார். வங்கி மேலாளர் தாம் நேரில் வந்து பார்த்த பின் பணம் தருவதாக கூறி விட்டார். மேலாளர் வருவதற்குள் கணேஷ் மரணம் அடைந்து விட்டார். இதனால் துக்கமுற்ற பெற்றோர்கள் கணேஷின் பிணத்துடன் வங்கிக்கு சென்று போராட்டம் நடத்தி உள்ளனர்.
வங்கி மேலாளர் அதன் பிறகு அவர்களுக்கு பணத்தை அளித்து அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து மேலாளர். “கணக்கு வைத்திருப்பவரை தவிர வேறு யாருக்கும் நாங்கள் பணம் கொடுக்க வங்கிச் சட்டத்தில் இடம் இல்லை. நான் அவரைப் பார்த்து விட்டு அவர்கள் மேல் உள்ள இரக்கத்தினால் பணம் அளிக்க எண்ணி இருந்தேன். ஆனால் அவர் அன்றே இறந்து விட்டார். அதனால் வாரிசுதாரர் என்னும் அடிப்படையில் நான் பணத்தை அளித்தேன்” எனக் கூறி உள்ளார்.