டெல்லி 

கேரளாவில் நிலவும் கடும்வறட்சி குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதருடன் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில்  காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

எப்போதும் இல்லாத அளவுக்கு கேரளாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியஅரசு கேரளாவுக்கு தரும் 40 லட்சம்  மெட்ரிக் டன் அரிசியை  10 லட்சமாக குறைத்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளாவின் அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் பிரதமர் மோடியிடம் விரிவாக விளக்கம் அளிக்கநேரம் ஒதுக்கித் தரும்படி கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது.

இதையடுத்து மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மாவேலிக்கரை காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ் இப்பிரச்னையை எழுப்பினார். அப்போது அவர், கேரளாவில் வறட்சி நிலை அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் கேரளபிரதிநிதிகளுடன் சந்திக்க நேரம் ஒதுக்கித் தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். சுரேசுக்கு ஆதரவாக கேரள காங்கிரஸ் உறுப்பினர்களும், பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.