பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த கட்சியின் வரலாற்றை நன்கு அறிந்த மூத்த நிர்வாகி ஜி.கே. மணி தைலாபுரம் விரைந்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாமக புத்தாண்டு தீர்மான சிறப்பு கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் தைலாபுரத்துக்கும் மற்றொருவர் பனையூருக்கும் கிளம்பிச் சென்றிருப்பதால் அப்பாவி பாமக தொண்டர்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர்.

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமித்து, இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம் என்ற ரீதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

ராமதாஸின் இந்த கருத்துக்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “முடிந்தால் என்னை எல்லோரும் பனையூர் வந்து பாருங்கள்” என்று பேசிவிட்டு கிளம்பினார்.

அதேவேளையில், இது நான் ஆரம்பித்த கட்சி, இது நான் சம்பாதித்த சொத்து என்ற ரேஞ்சுக்கு பேசிய மருத்துவர் ராமதாஸ், ஒரு கட்டத்தில், “நான் சொல்வதை ஏற்றுக்கொண்டால் கட்சியில் இருக்கலாம், இல்லைன்னா யாராக இருந்தாலும் கட்சியை விட்டு போங்க” என்று உரத்த குரலில் உத்தரவிட்டார்.

இதனால் கட்சிக்காகவும் சமூக நீதிக்க்காகவும் உயிர்கொடுத்து கட்சியை வளர்த்த பலரும் தங்களை தாங்களே நொந்துகொண்டு வேதனையுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

பாமக நிறுவனர் மற்றும் தலைவர் இடையே எழுந்த இந்த மோதல் காரணமாக செய்வதறியாது திகைத்து நின்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜி.கே. மணி தலைமையில் தைலாபுரம் சென்றுள்ளனர்.

அங்கு இளைஞரணி தலைவர் விவகாரத்தில் அன்புமணி மீது கோபமடைந்துள்ள பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு தீர்மானம்… பாமக யார் சொத்து என்பதில் அன்புமணி – ராமதாஸ் இடையே வாக்குவாதம்… மேடையேறிய குடும்ப சண்டை