சென்னை: நடிகர் சூர்யா நடித்து வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையான நிலையில், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, சூர்யாவுக்கு ஆதரவாக திருமாவளவன் உள்பட சிலர் ஆதரவாகவும், பாமகவுக்கு ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், சூர்யா படம் தியேட்டர்களில் வெளியானால், தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜெய்பீம் விவகாராத்தில் நடிகர் சூர்யாவிடம் வன்னியர் சங்கம் ரூ5 கோடி நட்ட ஈடு கேட்டது. நடிகர் சூர்யாவை உதைத்தால் ரூ1 லட்சம் பரிசு தருவோம் என மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க.செயலாளர் பழனிச்சாமி அறிவித்தது சர்ச்சையானது. ஆனால், சூர்யாவுக்கு ஆதரவாக திருமாவளவன், கம்யூனிஸ் கட்சிகள் களமிறங்கி உள்ளன. இந்த படத்தினால், அமைதியான தமிழ்நாட்டில், மீண்டும் ஜாதி கலவரம் உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சூர்யா பிரச்சினையால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜெய்பீம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் எங்கும் சூர்யாவின் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம் என பாமக துணை பொது செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பாமகவினர், தென் சென்னை காவல் இணை ஆணையரிடம் புகார் அளித்தனர். புகார் மனுவில் ” சூர்யா நடித்து வெளி வந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் வன்னியர் சமுதாயத்தினரிடமும், பட்டியலின சமுதாயத்தினர் இடையேயும் கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. மேலும் வன்னியர் சமுதாய தலைவர்களைப் பற்றி அவதூறாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த தொழில் புரிவோர் மற்ற சமுதாயத்தினருடன் இணக்கமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொழில் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, இந்த படத்தில் நடித்த சூர்யா (suriya), இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனக் கூறப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், “வன்னிய சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஜெய்பீம் படம் உள்ளது. பொழுது போக்கிற்காக படம் எடுக்கலாம். ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வன்னிய சமுதாயத்தை கொடூரமானவர்கள் போல் சித்தரிப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும். நடிகர் சூர்யா, படத்தின் இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டில் சூர்யாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்த விடமாட்டோம்” என்று கூறினார்.
இதனால், பரபரப்பு ஏற்படுடுள்ளது. இதையடுத்து, சூர்யா வீடு உள்பட அவரது அலுவலகம் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உளவுப்பிரிவு அளித்த தகவலின்பேரில், நடிகர் சூர்யா வீட்டிற்கு ஒரு தலைமைக் காவலர் உள்பட துப்பாக்கி ஏந்திய ஐந்து காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு முதல் ஒரு தலைமை காவலர் உள்பட ஐந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சிமுறையில் 24 மணிநேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பாமக அச்சுறுத்தல் தொடர்பாக சூர்யா தரப்பில் இருந்து நேரடியாக எந்தவொரு பாதுகாப்பும் கேட்காத நிலையில், மாநில காவல்துறையியே அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறப்படுகிறது.