நியூஸ்பாண்ட்:
நியூஸ்பாண்ட்:

திடுமென அலுவலகத்துக்குள் எண்ட்ரி ஆனார் நியூஸ்பாண்ட்.  ஆனந்த அதிர்ச்சியில் ஆரத்தழுவி வரவேற்றோம்.
“அடடா.. என்ன இது இவ்வளவு பாசம்?” என்றார் பாண்ட்.
“பாசமில்லாமல் எப்படி.. உம்மை பார்ப்பதே அரிதாக இருக்கிறதே” என்றோம் ஆதங்கத்துடன்.
“என்ன செய்ய.. வேலை.. வேலை.. வேலை..!”
“சரி, பாண்ட்! முக்கிய விசயம் இல்லாமல் வரமாட்டீரே! என்ன சேதி?”
“சொல்கிறேன்…  எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைச் சொல்ல வந்தேன்!”
“சொல்லும்.. சொல்லும்!”
“கடந்த இருபத்தி நான்காம் தேதி, பா.ம.க. செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாலு போயஸ் கார்டன் சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒரு கடிதம் கொடுத்தாக சொன்னார் அல்லவா..”
ராமதாஸ்
ராமதாஸ்

“ஆமாம்… ராமதாஸ் எழுதிய கடிதம்…”
“அதுதான் இல்லை. அதாவது முதல்வரிடம்  கொடுக்கப்பட்டது கடிதம் அல்ல. ஆவணங்கள்!”
“என்ன சொல்கிறீர்…”
“பொறுமை.. பொறுமை! எஸ்.ஆர்.எம். குழுமத்தன் ஆக்கிரமிப்புகள், மோசடிகள் குறித்து சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விவரித்து அறிக்கைகள் வெளியிட்டார் அல்லவா..”
“ஆமாம்!”
“அதற்கான ஆதார ஆவணங்களைத்தான் பாலு மூலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் சேர்ப்பிக்கப்பட்டதாம்!”
“ஓ…!”
பச்சமுத்து
பச்சமுத்து

“எஸ்.ஆர்.எம். பச்சமுத்து குறித்த தகவல்களை அதிகாரிகள் தரப்பில் முழுமையாக தன்னிடம் தரவில்லை என்ற சிந்தனை முதல்வருக்கு ஓடியிருக்கிறது. அந்த நிலையில்தான், ராமதாஸ் எஸ்.ஆர்.எம். குறித்து விரிவான அறிக்கைகள் வெளியிட… அவரிடமிருக்கும் ஆவணங்களை பெற விரும்பினாராம் முதல்வர்!”
“அப்படியா”
“அப்படித்தான் சொல்கிறார்கள். நன்றாக யோசித்துப்பாரும். ராமதாஸே கடிதம் கொடுக்க விரும்பினாலும் ஜெயலலிதா விரும்பாவிட்டால் நடக்குமா. அது மட்டுமல்ல…  அரசியல் ரீதியான கடிதம் என்றால் அதை பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மூலமாகத்தானே கொடுப்பார். செய்தித்தொடர்பாளராக இருக்கும் பாலு மூலம் கொடுக்க வேண்டியதில்லையே..”
“இது சரியான பாயிண்ட்தான்!”
ஜெயலலிதா
ஜெயலலிதா

“அதுமட்டுமல்ல..  பச்சமுத்து குறித்த ரகசிய விவகாரங்கள், ஆவணங்கள் என்பதால்தான், கோட்டையில் கூட சந்திக்காமல், போயஸ் இல்லத்துக்கே வரச்சொன்னாராம்!”
“ஓ…”
“கொடுக்கப்பட்ட ஆவணங்களைப் படித்து அதிர்ந்து போய்விட்டாராம் ஜெயலலிதா. எஸ்.ஆர்.எம். குழுமங்களில் நடக்கும் பண விவகாரங்கள், ஏரிகளை ஆக்கிரமித்து கல்லூரிகள் கட்டியதான புகார்கள் குறித்தெல்லாம் மிக விவரமாக ஆதாரத்துடன் இருந்ததால் அந்த ஆவணங்கள். அதோடு, திரைத்துறையில் பச்சமுத்து கொட்டியிருக்கும் பண விவகாரங்கள் குறித்தும் ஆதாரத்தோடு இருந்ததாம்..”
“அடடே…”
“ம்… இதையடுத்துத்தான் பச்சமுத்துவை கைது செய்ய க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதாம்!
“அப்படிப்போடு..!”
மதன்
மதன்

“இன்னும் கேளும். இந்த நிலையில் பா.ம.க. வட்டாரத்தில் சிலர் கெத்தாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது, “பச்சமுத்துவுக்கு நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர் மதன், ஒருகட்டத்தில் அதே பச்சமுத்துவின் டார்ச்சரால் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். இதை அவரது கடிதத்திலேயே சூசகமாக சொல்லியிருக்கிறார். தலைமறைவு ஆன பிறகும் பல இடங்களை தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கிறார். அப்போது பா.ம.க. தரப்பிலிருந்துதான் பாதுகாப்பு கரம் நீண்டது. மதன் மூலமாகவும் பல தகவல்கள் கிடைத்தன. அதுவும் முதல்வர் பார்வைக்கு அனுப்பப்பட்டது!” என்று பா.ம.க. வட்டாரத்தில் சிலர் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்!”
“அட… அப்படியானால் தயாரிப்பாளர் மதன், பா.ம.க. பாதுகாப்பில்தான் இருக்கிறாரா!”
“அப்படித்தான் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, தகுந்த நேரத்தில் மதன் வெளிப்படுவார் என்றும் சொல்கிறார்கள்!”
“ஓ…!”
“கல்வி வியாபாரம் செய்யும் பச்சமுத்துவுக்கு எங்கள் அய்யா தகுந்த பாடம் கற்பித்துவிட்டார் என்று பெருமைப்படுகிறார்கள், அந்த சிலர்!”
“ஏதோ மர்மப்படம் மாதிரி இருக்கிறதே…!”
“அதற்கு நான் என்ன செய்ய முடியும்… என் காதுக்கு வந்த விசயங்களை வழக்கம்போல் உம்மிடம் கொட்டிவிட்டேன்!” என்ற நியூஸ்பாண்ட், நமது பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டார்.