சென்னை: பாமக கட்சியும், சின்னமாக இருக்கும் மாம்பழச் சின்னமும் ராமதாசுக்குத் தான் சொந்தம்  என்று தெரிவித்துள்ள ராமதாஸ் ஆதரவாளரான எம்எல்ஏ அருள்,  அன்புமணியின் திருட்டுத்தனத்தால் எதையும் கைப்பற்ற முடியாது என்ற  தெரிவித்துள்ளார்.

பாமகவில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது.  கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தந்தை மகனுக்கு இடையே மோதல் முற்றி உள்ளது. இதனால், இரு தரப்பும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, தங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 15) செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஆதரவாளரான பாமக எம்எல்ஏ வழக்கறிஞர் பாலு, பாமகவும், கட்சியின் சின்னம் மாம்பழமும் தங்களுக்கே சொந்தம், அதற்கான தேர்தல் ஆணையத்தின் ஆதாரம் இருப்பதாக கூறினார். அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. இந்த கடிதத்தின் வாயிலாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி தொடர்வார் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது என்ற கடித்தை காட்டினார்.

இந்த நிலையில்,  ராமதாஸ் ஆதரவாளரான பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்தபோது, , பாமக என்றும் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்தது என்பது பொய். எங்கள் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னும் விளக்கம் வரவில்லை.

அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கிவிட்டார். பாமக கட்சியும், சின்னமாக இருக்கும் மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம். அவர்களுடைய திருட்டுத்தனத்தால் எதையும் கைப்பற்ற முடியாது.

46 ஆண்டுகளாக பாமகவையும், வன்னியர் சங்கத்தையும் உருவாக்க பாடுபட்டவர் ராமதாஸ். ராமதாஸிடம் இருந்து கட்சியை அபகரிக்க எத்தனையோ முயற்சிகளை ஒரு குழு செய்து வருகிறது. பொதுக்குழு, செயற்குழுவை நீக்கப்பட்ட தலைவர் கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் இடைவிடாமல் 2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தால், தேர்தல் ஆணையத்திடம் வருடம்தோறும் மெமோவை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் சின்னம் ஒதுக்கப்படும் என்பதுதான் விதி. தொடர்ந்து இரண்டு வருடங்களாக 5 சதவீத வாக்குகளைப் பெற்று வருகிறோம். அது தொடர்பாக நாங்கள் கொடுத்த கடிதம்தான் இது.

63, நாட்டுமுத்து நாயக்கன் தெரு தான் பாமக கட்சியின் முகவரி. இதனை 10, திலக் தெரு என்ற அன்புமணியின் முகவரிக்கு மாற்றியுள்ளனர். இது யாருக்கும் தெரியாது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கான கடிதம்தான் இதுவே தவிர, அன்புமணிதான் தலைவர் என எங்கும் இதில் குறிப்பிடப்படவில்லை.

” தேர்தல் ஆணையம் அனுப்பியதாக பாலு காட்டிய கடிதத்தில் அன்புமணியின் பெயர் எங்கேயும் இல்லை.உண்மைக்கு மாறான தகவலைக் கூறியுள்ளார். கட்சிக் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என பாலு மட்டுமல்ல, வேறுயாராலும் கூற முடியாது .

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணிதான், அவருக்கே ‘மாம்பழம் ‘! தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம்