சென்னை: ‘தமிழக மக்கள் உரிமை மீட்க, தலைமுறையை காக்க அன்புமணியின் நடைபயணம் என்ற பெயரில், ஜுலை 25ஆம் தேதி நடை பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி.
பாமகவை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே மோதல் நீடித்து வரும்நிலையில், பாமக தலைவராக உள்ள அன்புமணி மக்களை சந்திக்க நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளார்.
‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ அன்புமணியின் நடைபயணம் எனற பெயரிலான லோகோ வெளியிட்டுள்ள அன்புமணி வரும் 25ந்தேதி தனது பயணத்தை தொடங்குவதாக அறிவித்து உள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 10 வகை உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடனும் திமுக ஆட்சிக்கு எதிராகவும் இப்பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ஆம் நாள் தொடங்கி 100 நாட்களுக்கு உரிமை மீட்புப் பயணம் நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமைத் தாயக நாளாக கொண்டாடப்படும் பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளில் இப்பயணம் தொடங்கவுள்ளது.
சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, 8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவிருகிறேன்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்த பயணத்திற்காக ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக அந்த இலட்சினையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு என்று கூறிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புகளை முன்னெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என சுலோகத்துடன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது அன்புமணி தமிழக மக்களின் உரிமையை மீட்க 100 நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளார்.
2026 தேர்தல் ஜுரம் தமிழக அரசியல் கட்சிகளிடையே பீடித்துள்ள நிலையில், ஆளாளுக்கு ஒரு சுலோகன்களை கூறிக்கொண்டு மக்களை சந்திக்க புறப்பட்டு விட்டனர்.