நெய்வேலி: அமைதியாக நடைபெற்று வந்த நெய்வேலி நில விவகாரத்தில், முற்றுகை போராட்டம் என அறிவித்து வன்முறை போராட்டக்களமாக்கி, பல பாமக தொண்டர்கள் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜகவுடன் டெல்லியில் கூட்டணி; தமிழ்நாட்டில் கூட்டணி இல்லை என கூறி பாமகவினரை மட்டுமின்றி தமிழ்நாடு மக்களையும் குழப்பி உள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய முற்றுகை போராட்டம், எப்போதும்போல வன்முறை போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தால் , நெய்வேலி உள்பட பல இடங்களிலும் பேருந்துகள் உள்பட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்த போராட்டதை முன்னின்று நடத்திய பாமக தலைவரை காவல்துறை கைது செய்து மாலையில் விடுவித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 40 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அதில் 38 பேர் கடலூர் மத்திய சிறையிலும் இரண்டு சிறுவர்கள் மட்டும் கடலூர் கூர்நோக்கு இல்லத்திலும் அழைக்கப்பட்டனர். பின்னர் கடலூரில் சிறையிலு இருந்து 18 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
மதுரை மத்திய சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 18 பேரை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம், பேசுகையில் “மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பாகமவை சேர்ந்த 55 பேரை காவல்துறை கைது செய்துள்ளது, கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுவிக்க வேண்டும், என்.எல்.சி க்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது, என்.எல்.சி நிலக்கரி எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது.
தமிழகத்தில் இனி நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 மாதங்களுக்கு முன் அறிவித்தார், ஆனால், மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 3 போகம் விளையும் விலை நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது, என்.எல்.சி 3 ஆம் சுரங்கம் அமையுமா? அல்லது அமையாதா? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், என்.எல்.சி பிரச்சினை தமிழக மக்களின் பிரச்சினை, விளை நிலங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது என மாநில அரசு கூறி வருகிறது. அப்படி இருக்கும்போது என்என்சி மின்சாரம் எதற்கு, தற்போது என்.எல்.சி தயாரிக்கும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. என்.எல்.சி நிறுவனத்துக்கு தமிழக அரசு ஏன் உதவியாக உள்ளது என தெரியவில்லை என கடுமையாக சாடினார்.
பின்னர் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அன்புமணி, பாஜக தலைமையிலான டெல்லி கூட்டணியில் பாமக உள்ளது; ஆனால் தமிழ்நாடு கூட்டணியில் அதாலது, டெல்லி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை என புதிய விளக்கம் அளித்தார். 2026ல் பாமக ஒரு மித்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துத்துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என கூறினார். அன்புமணியின் இந்த விளக்கம் பாமகவினரை மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களையும் கழப்பி உள்ளது.