டில்லி:

பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் 21 ஆயிரம் பேர் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 451 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த இந்த திட்டத்தின் மூலம் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கறுப்பு பணம் வெளியே வந்துள்ளது. இதன் இறுதி மதிப்பு வெளியிடும் பணிகள் தற்போது வரை நடந்து வருகிறது. இதில் ஒரு சிலர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை வருமான வரிததுறை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 50 சதவீத வரி மற்றும் அபராத தொகை செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாக இருந்தது என்று இதற்கான காலக்கெடு முடிந்த பிறகு வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 71 ஆயிரத்து 726 பேர் கணக்கில் வராத வருமானத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர். இந்த வகையில் 67 ஆயிரத்து 382 கோடி ரூபாய் கறுப்பு பணம் கணக்கில் வந்தது. இந்த திட்டத்தில் மூலம் 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரியாக அரசுக்கு கிடைத்துள்ளது.