டில்லி:
விண்வெளித்துறையில் இந்தியா வியத்தகு சாதனை படைத்துள்ளதாக மிஷன் சக்தி திட்டம் குறித்து பிரதமர் கடந்த 27ந்தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
இது தேர்தல் விதிமீறல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு நாடக தின வாழ்த்துக்கள் என்று விமர்சித்திருந்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி, தேர்தல் ஆணையத்தில், பிரதமர் மோடி மீது புகார் மனுவும் அளித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையம், மோடியின் உரையில் தேர்தல் விதி மீறல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என கூறியது.
அதைத்தொடர்ந்து பிரதமரின் உரை மற்றும், அவரது உரையை லைவ்வாக ஒளி, ஒலிபரப்பிய அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்ட காட்சி மற்றும் ஒலிப்பதிவுகளையும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘மிஷன் சக்தி’ பிரதமர் உரையில் தேர்தல் விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, மோடியின் உரையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் எந்த பேச்சும் அமையவில்லை என்றும், தேர்தல் குறித்தோ, வாக்காளர்களுக்கு எந்த அறிவிப்புமோ இடம்பெறாததால் இது தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.