புதுடெல்லி:
அரசு ஆவணங்கள் கசிந்ததாக விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்தால், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “ரஃபேல் ஆவணங்களை வழக்கறிஞர் பிரசாந் பூஷன் திருடிவிட்டதாகவும், அரசு ரகசியத்தை வெளியிட்ட தி இந்து ஆங்கில நாளேட்டின் மீது அரசு ரகசியத்தை வெளியிட்டதாக வழக்கு தொடரலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்தார்.
சரிதான். அப்படி நடவடிக்கை எடுத்தால், ரஃபேல் பேரத்தில் 8 நபர் குழுவுக்கு இணையாக தனியே விசாரணை நடத்திய பிரதமர் அலுவலகமும் விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த பேரத்தில் பிரதமர் மோடியின் நேரடி தலையீடு குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். தான் குற்றமற்றவர் என்றால், இது குறித்து விசாரிக்க பிரதமர் ஏன் உத்தரவிடக் கூடாது?
ஆவணங்கள் மட்டுமல்ல, எதையும் காணாமல் போவதாக சொல்வதே பாஜக அரசின் வேலையாக இருக்கிறது. 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர்.
விவசாயிகளின் பயிர்களுக்கு சரியான விலை நிர்ணயிப்போம் என்றனர். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ15 லட்சம் போடுவோம் என்றனர். இப்படி சொன்னதெல்லாம் காணாமல் போனதுபோல், ரஃபேல் ஆவணமும் காணாமல் போயிருக்கிறது” என்றார்.