வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான கங்கா விலாஸ்  கப்பல் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வாரணாசியில் சொகுசு கப்பல் எம்வி கங்கா விலாஸ் கப்பல்  சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி  இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு நதி வழியாகவே பயணிக்கும் வகையில், இந்த சொகுசுக் கப்பல் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

கங்கா விலாஸ் கப்பல் உ.பி. மாநிலம் வாராணசியிலிருந்து அசாம் மாநிலம் திப்ருகர் பகுதிக்க செல்கிறது.  சுமார் 3,200 கிலோ மீட்டர் தொலைவை, 51 நாள்கள் பயணித்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியை சென்றடைகிறது. இதற்கிடையில், இந்த கப்பலானது  நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வகையில் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி வாரணாசியில் இருந்து புறப்பட்டு, பாட்னா, பிகார் உள்ளிட்ட நகரங்களின் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா நகரங்களை இணைத்து வங்க தேசம் வழியாக அசாம்  சென்றடைகறிது. 3 தளங்களைக்கொண்ட  இந்த சொகுசுக் கப்பலில்  18 சொகுசு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் 36 பயணிகள் மட்டுமே பயணிக்கும் வகையில் அனைத்து அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை இந்த  இந்த சொகுசு கப்பல் சேவை  இயக்கப்படவுள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படவுள்ளதால், மழைக்கால மாதங்களில் சேவை நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்வழித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் சுற்றுலாத் துறையும், வணிகமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், எம்.வி. கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலில் பயணிக்கவுள்ள சுற்றுலா பயணிகள் கடந்த 3 நாள்களாக வாராணசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைப் பார்வையிட்டு கலாசாரத்தை உணர்ந்தனர்.

மாநிலத்துக்கு பல புதிய திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்துள்ளார். இதன் மூலம் காசி புதிய அடையாளங்களால் அறியப்படும். மேலும் இதில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, காசியையும் அசாமையும் இணைக்கும் கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் சேவையை தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சொகுசுக் கப்பலில் பயணிக்கவுள்ள சுற்றுலா பயணிகள், அசாமிலுள்ள காமிக்யா கோயில், காஸிரங்கா பூங்கா மற்றும் பல சுற்றுலா தலங்களில் பார்வையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எம்.வி. கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் சேவை தொடக்க நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் காணொலி மூலம் கலந்துகொண்டனர்.