டெல்லி: மக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மன் கீ பாத் என்ற நிகழ்ச்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார் பிரதமர் மோடி. இன்றைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் அவர் பேசி இருப்பதாவது:
மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவின் மக்கள் தொகை  அதிகமாக உள்ளது. அதையும் மீறி கொரோனா வைரசை திறன்பட எதிர்கொண்டு கையாண்டு இருக்கிறோம்.
பல துயரங்களை கடந்து வந்துள்ளோம். நமது நடவடிக்கைகளை கண்ட உலக நாடுகள் பெருவாரியாக ஆச்சரியமடைந்துள்ளன. சாமானிய மக்கள் மற்றும் ஏழை குடும்பங்களின் சேர்ந்தவர்கள் படும் துயரங்களை விவரிக்க வார்த்தையில்லை.
துயரமான நாட்களை நாம் ஒன்றிணைந்து கடக்க வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போரில் நாட்டு மக்கள் அனைவரும் போரிட்டு வருகிறோம். இதில் வெற்றி கிடைக்க நாம் நெடுந்தூரம் பயணம் செல்ல வேண்டும்.
தனிமனித இடைவெளியை கடைபிடித்தால்தான் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். கொரோனவிற்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அந்த போரில் இந்திய ரயில்வே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
யோகா, ஆயுர்வேதாவை நோக்கி மக்கள் நகர்ந்து வருகின்றனர். யோகா மூலம் சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கின்றனர்.ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 1 கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். ஆயுஷ்மான் திட்டத்திற்கு ரூ.24,000 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது: மதுரையில் மேலமடையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் என்பவர் தமது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். அவரை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்.