சென்னை:

சென்னை அருகே வண்டலூரில், நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டது.

ஆனால், அதிமுக கூட்டணியில், இன்னும் தேமுதிக, தமாகா போன்ற கட்சிகள் அதிகாரப்பூர்வ மாக இணையாத நிலையில், அந்த கட்சிகளின் சார்பாக கலந்துகொள்ளப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர்கள் கூறி வந்த நிலையில், மெகா கூட்டணியை திமுக காங்கிரஸ் கூட்டணி உருவாக்கி உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக, புதிய தமிழகம் கட்சிகள் மட்டுமே இணைந்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள மோடியின் பொதுக்கூட்டத்தில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க வேண்டும் என்றும், மோடியின் பிரசார கூட்டத்தில் விஜயகாந்தை பங்கேற்க செய்ய வேண்டும்  அமித்ஷா,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வசம்  கூறியுள்ள நிலையில், தேமுதிக  கூட்டணி உறுதியாகாத நிலையில் விஜயகாந்த் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கிடையில்,மோடி நாளை  பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஹெலிபேடுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

டில்லியிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வரும் பிரதமர் மோடி , தனி ஹெலிகாப்டர் மூலம் வண்டலூர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வர உள்ளார்.  இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளது.