பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தனது எல்லைக் கோட்டை தாண்டினால் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தொலைக்காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உயரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மே 7ம் தேதி இரவு ஆபரேஷன் சிந்தூரின் முதல் கட்ட நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள துணிவில்லாமல் இந்திய எல்லையோர பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட போதிலும் ஒரு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு எதிரிகளின் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்தது.

அணு ஆயுதம் போன்ற எந்த பூச்சாண்டிக்கும் இந்தியா பயப்படாது என்று தெரிவித்த பிரதமர் மோடி அப்பாவி மக்கள் இதனால் பாதிக்கப்படக் கூடாது என்று கூறினார்.

அதேவேளையில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) இந்திய டிஜிஎம்ஓ-வை அழைத்து போர் நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே இந்தியா போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இனியும் தனது கோட்டுக்குள் நிற்காமல் அத்துமீறலை தொடர்ந்தால் பேச்சுவார்த்தை எதுவுமே இருக்காது என்று எச்சரித்த பிரதமர் மோடி இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.