பீஜிங்:
சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி, அங்கு சீன பிரதமருடன் இன்று 2வது நாளாக படகு சவாரி செய்த நிலையில் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்..
மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்னர் தற்போது 4வது முறையாக சீன பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டோக்லாம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சீன பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி, ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என கூறியதாக செய்திகள் வெளியானது. இதற்கு சீன பிரதமரும் வரவேற்பு தெரிவிக்கதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று 2வது நாளாக சீனாவில் தங்கி இருக்கும் பிரதமர் மோடி, இன்று காலையில், வுஹானில் உள்ள ஏரி பகுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நடைபயிற்சி மேற்கொண்டு, தேநீர் அருந்தினார். அதைத்தொடர்ந்து, சீன பிரதமருடன் படகு இல்லத்தில் சவாரி செய்தவாறு இந்தியா- சீனா இடையிலான நல்லுறவுகள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படு கிறது.
மேலும், இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினையை அமைதியான வழியில் கையாளும் வகையில், அமைதியை நிலைநாட்டும் வகையில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் தகவல் தொடர்புகளை பலப்படுத்தவும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கவும் இன்றைய பேச்சு வார்த்தையின்போது தீர்மானிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
இன்றுடன் மோடியின் 2 நாள் சீன பயணம் முடிந்து இந்தியா திரும்புகிறார்.