பெங்களூரு

இன்று பிரதமர் மோடி சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்திக்க உள்ளார்.

நிலவை ஆராய்ச்சி செய்யச் சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ)  விண்ணில் செலுத்தி இருந்தது. அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்குத் தரை இறங்கி பெரும் சாதனை படைத்ததது.

இத்திட்டத்திற்கான கட்டளையிடும் பணிகள் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு அருகே பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாடு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா நிலவில் இந்தியா காலூன்றிய சரித்திர சாதனையைத் தொடர்ந்து அன்றைய தினமே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பீனியாவில் உள்ள இஸ்ரோ நிறுவனத்திற்கு சென்று விஞ்ஞானிகளை நேரில் பாராட்டி கவுரவப்படுத்தி இருந்தார்கள்.

சந்திரயான்-3 வெற்றி பெற்றிருப்பதுடன், நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரை இறங்கி சாதனை படைத்துள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவிக்கப் பிரதமர் மோடி முடிவு செய்திருந்தார்.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள மோடி அங்கிருந்து நேரடியாகப் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அங்கு வைத்து கர்நாடக பா.ஜனதா தலைவர்கள், பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி ஓய்வெடுக்க உள்ளார்.

காலை 6.30 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பீனியாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்குப் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்று காலை 7 மணியளவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்கு வித்திட்ட விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பாராட்டு தெரிவிக்க உள்ளார். ஒரு மணி நேர இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.