மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தியி சமூகங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மோதலை அடுத்து மாநிலம் இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மெய்தியி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியதை அடுத்து மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய கிறித்தவ மதத்தைச் சேர்ந்த குக்கி பழங்குடி இன மக்களுக்கும் உயர் வகுப்பைச் சேர்ந்த இந்து மெய்தியி சமூக மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக தொடர்கிறது.

இந்த வன்முறையில் 200 க்கும் மேற்பட்ட கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட குக்கி பழங்குடியின மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சமூகங்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருவதை அடுத்து மாநிலம் பிளவுபட்டிருப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட டாக்குமென்டரியில் குறிப்பிட்டுள்ளது.

https://twitter.com/FriedrichPieter/status/1671920721692438528

பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்டு சொந்த மண்ணில் அவர்கள் அகதிகளாக்கப்பட்டதில் ஆட்சியாளர்களின் பங்கும் இருப்பதாக அம்மாநில மக்கள் குற்றம்சாட்டி வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் போன்று மணிப்பூர் மாநிலமும் பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆவணப் படம் காட்டுகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் எகிப்த் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை இந்தியா வந்த பிரதமர் மோடி உள்துறை அமைச்சருடன் மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசிக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.