டில்லி

ன்று பழமையான வாகனங்களை அழிக்கும் திட்டத்தை டில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நாடெங்கும் பழமையான வாகனங்களால் அதிகப் புகை வெளியாகி சுற்றுச் சூழலை மாசு படுத்துவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.   எனவே இந்த வாகனங்கள் சாலையில் செல்வதைத் தடுத்து அவற்றை அழிக்க மத்திய அரசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.  அதன்படி வர்த்தக வாகனங்கள் 15 வருடங்கள் ஆனவையும் மற்ற வாகனங்கள் 20 வருடங்கள் ஆனதும் இந்த திட்டத்தின் கீழ் வருகின்றன.

இந்த திட்டம் முதலில் அரசிடம் உள்ள வாகனங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது.  அதன் பிறகு கனரக வர்த்தக வாகனங்களும் பிறகு சொந்த வாகனங்களும்  இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன என சோஅலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக செயலர் கிரிதர் அரமனே அறிவித்துள்ளார்.

இன்று அதன் அடிப்படையில் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தை டில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.    இந்த பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் ரூ.10,000 கோடி செலவில் நடைபெற உள்ளது.  இதை அவர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் அவருடன் மத்திய அமைச்சர் கட்கரி கலந்து கொண்டார்.

இவ்வாறு அழிக்கப்படும் வாகனங்களின் உலோக பாகங்கள் வாகனம் உற்பத்திச் செலவில் 40% என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த உலோகங்களை மறு பயன்பாடு செய்வதன் மூலம் இந்திய வானக உற்பத்தி மிகவும் பயனடையும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த திட்டத்தினால் பல புதிய வாகனங்கள் விற்பனை செய்வதால் ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு ரூ.30000 கோடி முதல் ரூ.40000 கோடி லாபம் கிடைக்கும் எனவும் அவர் கூறி உள்ளார்.