இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் என அனைவரின் வாழ்வும் இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் மேம்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த பட்ஜெட்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
“கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு 4 கோடிக்கும் அதிகமான வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். இப்போது மேலும் 2 கோடி புதிய வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்கும் இலக்கில் 2 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்கியுள்ளோம். தற்போது இந்த இலக்கை மேலும் 3 கோடி அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் லட்சாதிபதி பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இன்றைய பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவின் தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் என அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கியது மற்றும் புதுமையானது. இந்த பட்ஜெட் நாட்டை மேம்படுத்தும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.