டில்லி

விரைவில் நேதாஜியின் கிரானைட் கல்லால் ஆன சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இன்று நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ்சந்திர போஸின் 125 ஆம் பிறந்த நாள் ஆகும்.   இந்த நாள் நாடெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி பிரதமர் மோடி டில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண லேசர் சிலையைத் திறந்து வைத்துள்ளார்.

இந்த சிலை திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,

“இன்றைய நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர் நாம் நிற்கும் இந்த இடமும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது ஆகும். நாம் நேதாஜி பிறந்தநாளை வீர திருநாளாகக் கொண்டாட முடிவு செய்து அதன்படி நேதாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியர்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தவர் ஆவார். அவர் சுதந்திரப் போராட்டத்தில் நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து கடுமையான சோதனைகளைச் சந்தித்தபோதும், பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிய மறுத்தவர் ஆவார்.

அத்தகைய நேதாஜியின் சிலை ஜனநாயக விழும்பியங்களையும், எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவிக்கும். வெகு விரைவில் ஹோலோகிராம் சிலைக்குப் பதிலாகப் பிரமாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும்.  புதிய சிலை அமைக்கப்படும் வரை லேசர் முறையில் முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும்”

என தெரிவித்துள்ளார்.