அபுதாபி

பிரதமர் மோடி அமீரகத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டார். அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.

துபாய் – அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முறைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

கடத்த சில அண்டுகளாக , கோவில் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.  நாளை அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது.  இந்தக் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வரவேற்றார். இதனை தொடர்ந்து பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியச் சமூகத்தினரை சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். பிரதமர் மோடி கலை நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.