சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏப்ரல் 8ந்தேதியும், திமுக – காங். கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி ஏப்ரல் 10ந்தேதியும் மீண்டும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
தேர்தலையொட்டி தமிழகத்தில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருபுறமும், திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றொரு புறமும் சூறாவளியால் சுழன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில்அ.தி.மு.க. கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதுபோல தி.மு.க. கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின், வைகோ, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர், இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கோவையில் வருகிற 8-ந்தேதி நடைபெறும் மாபெரும் பிரசார கூட்டத்தில் உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பிரதமர் மோடி, மதுரை, திருப்பூர், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் தமிழகம் வருகிறார்.
அதுபோல, திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13-ந்தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில், ராகுல் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய அழைக்கப்பட்டுள்ளார். வருகிற ஏப்ரல் 10-ந்தேதி ராகுல் திருச்சியில் நடைபெற உள்ள பிரமாண்ட பிரசார பொதுக்கூட் டத்தில் ராகுல் கலந்துகொண்டு, திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்குஆதரவாக வாக்கு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது.
ராகுல்காந்தி திருச்சியில் பிரசாரம் செய்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கூறி வருகிறார்கள்.