டெல்லி: அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இ-கோர்ட் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, இணையதள நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். மேலும், நீதித்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் செயலியை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.
இந்திய அரசமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு, இந்தியா ஜனநாயகங்களின் தாய் என்ற தலைப்பில் அரசியல் சாசன தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விர்ச்சுவல் ஜஸ்டிஸ் கடிகாரம், JustIS மொபைல் ஆப் 2.0, டிஜிட்டல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களுக்கான S3WAAS உள்ளிட்ட இணையதளங்களைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அரசமைப்பு சாசனத்தின் சிறப்புகள் குறித்து பேசிய பிரதமர், உலகிற்கே இந்திய ஜனநாயம் முன்னுதாரணமாக திகழ்கிறது. உலக அரங்கில் இந்தியாவை வலிமையான நாடக மாற்ற வேண்டும். அரசியல் சாசனம் எழுதப்படும் போது நமது தலைவர்கள் எதிர்கொண்ட சவால்களை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் உதவும். நமது அரசியல் சாசனமே நமது மிகப்பெரிய பலம். நமது அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கை.
இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவையே நோக்கியுள்ளது. இந்தியாவின் விரைவான வளர்ச்சி, அதன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் உள்ளிட்டவைகளை உலகம் நம்மை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள் வருகின்றன. எல்லா தடைகளையும் தாண்டி, முன்னே செல்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றும். இது பெரியது. ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் பிம்பம் வலுப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். நாம் அனைவரும் இந்தியாவின் மதிப்பை உலகத்தின் முன் உயர்த்தி, அதன் பங்களிப்பை அவர்கள் முன் கொண்டு வர வேண்டும். அது நமது கூட்டுக் கடமை என பிரதமர் அவரது உரையில் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, அரசியல் சாசனத்தின் சிறப்புகளுடன் மும்பை பயங்கரவாத தாக்குதலையும் நினைவு கூர்ந்து பேசினார். அதாவது பிரதமர் கூறுகையில், மும்பை தீவிரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று. 14 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளைக் கொண்டாடும் போது, மனிதகுலத்தின் எதிரிகள் இந்தியாவின் மீது மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினர். மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ந்தை பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.