கோழிக்கோடு
பிரதமர் மோடி நமது நாட்டின் பிரச்சினைகளைக் கவனிக்காமல் பாகிஸ்தான் மீது கவனம் செலுத்தி வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறி உள்ளார்.
நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றன. அவ்வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடந்த ஒரு பேரணியில் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கலந்துக் கொண்டார்.
கபில் சிபல் தனது உரையில், “தேசிய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே எதிரானது ஆகும். இவற்றை நான் எனது இறுதி மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன் என உங்களுக்கு உறுதி கூறுகிறேன். இது ஒரு நீண்டகால போராக இருக்கும். அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கலந்துக் கொண்டு இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை ஓயாது.
நாட்டில் வேலை இன்மை, பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் துயரம் போன்ற பல பிரச்சினைகள் இருக்கும் போது நமது பிரதமர் மோடி பாகிஸ்தானைப் பற்றி கனவு கண்டு வருகிறார். கனவில் இருந்து விழிப்பு வந்ததும் பாகிஸ்தானைப் பற்றிப் பேச தொடங்குகிறார். அவர் நமது நாடாளுமன்றத்திலும் பாகிஸ்தானைப் பற்றியே பேசுகிறார். இந்தியாவை முழுமையாக அவர் மறந்து விட்டார். எப்போதும் பாகிஸ்தானைப் பற்றி மட்டுமே கவலை கொள்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.