மதுரை: மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தபிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும்போது திமுக அரசை கடுமையாக சாடினார்.
இஸ்ரேல் சென்றுவிட்டு திரும்பிய பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இங்கு நடைபெறுகிற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், இன்று (மார்ச் 1 ஆம் தேதி) காலையில் புதுச்சேரியில் நடைபெற்ற நலத்திட்ட துவக்க விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 3:00 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்
திமுக அமைச்சர்களுக்கு மோசடி செய்வதில்தான் போட்டி
ஏழைகளிடம், விவசாயிகளிடமிருந்துதான் திமுகவினர் மோசடி செய்கிறார்கள்,
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு 9மடங்கு நிதி அதிகரிப்பு
மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.18.28 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள காரைக்குடி ரயில் நிலையம், ரூ.12.58 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள மணப்பாறை ரயில் நிலையம், ரூ.9.86 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள சோழவந்தான் ரயில் நிலையம், ரூ.8.84 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும் தமிழ்நாடு – கேரளாவை இணைக்கும் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இந்த திட்டங்கள் உட்பட ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தே.ஜ. கூட்டணி பதவிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றும், குற்றவாளிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டு வருகை புரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மாலை வழக்கமாக இந்தியில் பேசும் பிரதமர், இன்றைய பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார்.‘
மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி உரையை தொடங்குவதாக கூறிய மோடி, மதுரையின் பெருமையை பறைசாற்றினார். அவர் பேசுகையில், “பாண்டிய நாடு வீரத்தின் நிலம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அழகுமுத்துக் கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தியாகி இம்மானுவேல் சேகரன் ஆகியோரின் தியாகத்தை இங்கே நினைவுகூர்கிறேன். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சென்று வணங்கியது தெய்வீக அனுபவமாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்காக வேண்டினேன். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்து எனது இரங்கலைத் தெரிவித்தேன். திமுக அரசின் மனிதநேயமற்ற தன்மை காரணமாக இந்த கொடுமை நிகழ்ந்தது. இருப்பினும் நிச்சயமாக வாய்மையே வெல்லும்.

தமிழ்நாட்டில் சிலர் ஆட்சியைப் பிடிக்க கனவு காணுகிறார்கள். இந்தக் கூட்டத்தைப் பார்த்தபின்னர் அது கானல் நீராக மாறும். வருகின்ற தேர்தல் தமிழ்நாட்டில் திருப்புமுனையாக அமையப் போகிறது. தமிழக மக்கள் திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட தயாராகிவிட்டனர். அதனைக் கண்கூடாக காண முடிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதே மக்களின் முடிவாக உள்ளது.
2021இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின் இவர்கள் மக்களைக் கொள்ளையடித்தார்களே தவிர, நல்ல ஆட்சியைக் கொடுக்கவில்லை. பரம்பரை அரசியலை முன்னெடுத்தார்கள். மதுரையை உயிருக்கு உயிராக நேசித்த எம்ஜிஆருக்கு உறுதுணையாக நின்றது மதுரை மாநகரம். திமுகவுக்கு மதுரை என்றால் வேப்பங்காயாக உள்ளது. திமுகதான் மதுரையில் மாஃபியா அரசியலை அறிமுகம் செய்தது. சுத்தம், சுகாதாரம், தூய்மையில் மதுரையைக் கீழே கொண்டு சென்றுவிட்டது. ‘பணம் நமக்கு, பிரச்சினை என்றால் மக்களுக்கு’ என்பதுதான் இவர்களின் மாடல்.
பிரதம மந்திரி ஊரகப்பகுதி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், 3 லட்சம் வீடுகள் முடிக்கப்படாமல் உள்ளன. திமுக அரசு அதற்குரிய கள ஆய்வை மேற்கொள்ளாமல் இழுத்தடிக்கிறது. இதனால் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம். இங்கே அளவில்லாத வாய்ப்புகள் இருக்கின்றன. காங்கிரசும் திமுகவும் 2014ஆம் ஆண்டுக்கு முன்னால் கூட்டணி ஆட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னை துறைமுகம்-மதுரவாயல் திட்டத்தைத் செயல்படுத்தினோம். காமராஜர் துறைமுகத்தை அதிக திறன் வாய்ந்ததாக மாற்றினோம். சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயில் 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளும் பொருளாதார வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்களே, இவர்கள் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யவில்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

2004-2015 முதல் ஆட்சியிலிருந்த காங்கிரசும் திமுகவும் என்ன செய்தார்கள்? அங்கு ரயில்கள் மட்டும் மெதுவாகச் செல்லவில்லை. அவர்களது கோப்புகளும்தான். பாம்பன் பாலத்தை நவீனமயமாக்கி இன்று திறந்து வைத்தது இன்றைய மத்திய அரசுதான். இப்போது அந்தப் பாலத்தில் மிக விரைவாக பயணம் மேற்கொள்ள முடியும். 2009-2014ஆம் ஆண்டு காங்கிரஸ்-திமுக ஆட்சியில் ரயில்வே நிதி வெறும் 880 கோடி ரூபாய்தான். அதுவே 2026-2027இல் 7600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ஏறக்குறைய 8 மடங்கு அதிகம். மாநிலத்திற்கு நல்லது செய்ய முடிந்த காலத்தில் காங்கிரஸ்-திமுக செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு கூப்பாடு போடுகிறார்கள்.
தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது
தமிழ்நாடு மிகப்பெரும் பிரச்சினையில் உள்ளது. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போதைப்பொருள்கள் அதிகரித்துள்ளன. மதுபானத்தால் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. ஜெயலலிதா ஆட்சியில்போது, தங்களுடைய வாழ்க்கை எத்தனை சிறப்பானதாக இருந்தது என்பதை பெண்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். நாங்கள் பதவிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம். குற்றவாளிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சிறைகளில் அடைக்கப்படுவார்கள். பாதுகாப்பு, கண்ணியம், அதிகாரப் பரவலாக்கத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள். விடுதலைக்குப் பிறகு அம்பேத்கர் தலைமையிலான குழு அரசியல் சட்டத்தைக் கொடுத்தார்கள். நான் அதன்படியே செயல்பட்டு வருகிறேன். ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அரசியலுக்கு நேர்மை மிகவும் முக்கியம். இதற்கு நல்ல உதாரணம் முன்னாள் முதல்வர் காமராஜர். அதற்கு நேரெதிரான உதாரணம் திமுக. பணியிட மாறுதலில் 365 கோடி, அரசுப்பணிகளில் 900 கோடி, ஒப்பந்தங்களில் 1000 கோடி, மணல் திருட்டில் 4700 கோடி, டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி என மோசடி நடந்திருக்கிறது.
திமுக அமைச்சர்களுக்கு மோசடி செய்வதில்தான் போட்டி உள்ளது. ஏழைகளிடம், விவசாயிகளிடமிருந்துதான் இந்த மோசடியைச் செய்கிறார்கள். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். தூய்மையான திறமையான அரசை நாங்கள் கொண்டு வருவோம்.
காங்கிரசை தமிழ்நாடு 60 ஆண்டுகள் விலக்கியது. காங்கிரசிடமிருந்து விடுதலைப் பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு. இதனால் வஞ்சத்துடன் கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனை எதிர்த்து திமுக ஒன்றும் செய்யவில்லை. திமுக அவர்களுக்கு ஆதரவளித்தபோது, ஜல்லிக்கட்டை தடை செய்து, அறிக்கை வெளியிட்டது. ஆனால் ஜல்லிக்கட்டை தொடரச் செய்து அவசரத் சட்டத்தை கொணர்ந்தது நாம்தான்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழக கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.
இந்திய-ஐரோப்பிய ஒன்றித்துடன் வரலாற்று ஒப்பந்தத்தால் 28 முன்னேறிய நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளோம். இளைஞர்கள், பணியாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்களுக்கு, மின்னணு, ஜவுளித்துறை, கடல்சார் தொழில்துறை என உலகளாவிய சந்தைகள் திறந்துள்ளன. இன்னும் அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்கும். இதையெல்லாம் கிடைக்கச் செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியமைக்க வேண்டும். வளர்ச்சியான தமிழ்நாடு, வளர்ச்சி பெற்ற இந்தியா அமைய வேண்டுமானால் தே.ஜகூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்”.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
முன்னதாக, பிரதமர் மோடி அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி முருகப் பெருமான் மற்றும் இதர பரிவார தெய்வங்களை வழிபட்டார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பிரசாதங்களும், முருகப் பெருமானின் திருவுருவப் படம் பரிசாக வழங்கப்பட்டது.