டெல்லி

னடாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி விதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த மாதம் 14-ந் தேதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார்.

கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஏப்ரல் 28ம் தேதி கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக கட்சி ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக உள்ள மார்க் கார்னிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,

கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான இரு நாட்டின் மக்கள் உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும். எங்கள் மக்களுக்கு அதிக வாய்ப்புகளைத் உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்:

ஏன்றுபதிவிட்டுள்ளார்.