டெல்லி:

காராஷ்டிரா முதல்வராக நேற்று மாலை பொறுப்பேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கேரேவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த  ஒரு மாதமாக நீடித்து வந்த இழுபறி நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு பாஜக, சிவசேனா கூட்டணி உடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

மாநில முதல்வராக பசிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 3கட்சிகளைச் சேர்ந்த 6 அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர். இவர்களுக்கு  ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மும்பை தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் முதல்வர் பட்னவிஸ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார், தேசியவாத காங்., எம்.பி., சுப்ரியா சுலே, உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா, தொழிலதிபர் முகேஷ் அம்பானி உட்பட பலர் பங்கேற்றனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சோனியா காந்தி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி போன்றோர் விழாவில் பங்கேற்காமல் வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தனர். அதுபோல பிரதமர் மோடியும் உத்தவ் தாக்கரேவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்துகள் உத்தவ் தாக்கரே ஜி. மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு நீங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றுவீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனியா வாழ்த்து

சோனியா எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், ‘ஆதித்யா நேரில் அழைப்பு விடுத்தும், என்னால், விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். உங்களின் புதிய வாழ்க்கை சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்’ என கூறியிருந்தார்.

ராகுல் வாழ்த்து

ராகுலும், உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரித்து கடிதம் அனுப்பியிருந்தார். தன்னால் நேரில் கலந்து இயலவில்லை. தங்கள் மீது மகாராஷ்டிரா மாநில மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். ஏழைகளுக்கான அரசாங்கமாக உங்கள் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.