டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவிற்கு  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை கோளாறு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரிய வர, அதை அகற்ற செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது, பிரணாப்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந் நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி  பிரணாப் முகர்ஜி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தமது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: பாரத ரத்னா ஸ்ரீ பிரணாப் முகர்ஜி மறைவு, இந்தியாவையே வருத்தப்படுத்தப்பட வைத்துள்ளது. பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் அழியாத அடையாளத்தை பதிவு செய்துள்ளார்.

ஒரு அறிஞர், உயர்ந்த அரசியல்வாதி, அரசியல் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் போற்றப்பட்டவர் என்று தெரிவித்து உள்ளார். மற்றொரு டுவிட்டரில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:

ஜனாதிபதியாக, ஸ்ரீ பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனை பொதுவான குடிமக்களுக்கு எளிதாக அணுகுமாறு மாற்றினார். ஜனாதிபதியின் வீட்டை கற்றல், புதுமை, கலாச்சாரம், அறிவியல் மற்றும் இலக்கிய மையமாக மாற்றினார். முக்கிய கொள்கை விஷயங்களில் அவரது புத்திசாலித்தனமான ஆலோசனையை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது என்று கூறி உள்ளார்.