டெல்லி: பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம்  தொடங்கப்படும் என்று சுதந்திரதின விழாவில் உரையாற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பாரம்பரியமாக, முடி திருத்துபவர்கள், பொற்கொல்லர்கள், துணி துவைப்பவர்கள் போன்ற திறமையான பணிகளை செய்வதுபவர்களுக்கு உதவும் வகையில், , ₹13,000 கோடி முதல் ₹15,000 கோடி வரை விஸ்வகர்மா திட்டத்தை அரசு தொடங்கும். செப்டம்பர் மாதம் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று இத்திட்டம் தொடங்கப்படும் என்றும்,  விஸ்வகர்மா ஜெயந்தி 17 செப்டம்பர் 2023 அன்று அமலுக்கு வரும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,  தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி  10வது ஆண்டாக மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, “கொரோனா பரவலுக்கு பிறகு, முழுமையான சுகாதாரம் என்பதே முதல் தேவை என்பதால், தனியாக ஆயுஷ் துறையை நிறுவினோம். தற்போதும் உலகம் முழுவதுமே ஆயுஷ் மற்றும் யோகாவை கவனத்தில் கொண்டிருக்கின்றன.

நமது அர்ப்பணிப்பின் காரணமாக, தற்போது உலகம் நம்மை உற்று நோக்குகிறது. இந்தியா தற்போது விண்வெளி தொழில் நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல, ஆழ்கடல் பணி, ரயில்வேயை நவீனமயமாக்கல், வந்தே பாரத் புல்லட் ரயில் என அனைத்தையும் செய்து வருகிறோம். மேலும், நானோ யூரியா தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் உள்ளிட்டவை கிடைக்க 10 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டிற்காக கரீஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான ஏழைகள் வறுக்கோட்டிலிருந்து வெளியே வந்து நடுத்தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறார்கள்.

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தின் கீழ், நமது இராணுவ வீரர்களுக்கு 70,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அறிவிப்பு மற்றும் அடிக்கல் நாட்டுவதோடு நின்று விடாமல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தற்போது, பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில், புதிதாக விஸ்வகர்மா என்கிற திட்டத்தை 13 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.