டெல்லி: நவம்பர் மாதம் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு காணொலிக்காட்சி மூலம் இன்று மாலை 4 மணியளவிவ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தற்போதுள்ள மழை காலத்தில் சளி, காய்ச்சல் வரும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
நாட்டில் மிக சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட முழுமுடக்கத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால், தளர்வின்போது பொது இடங்களில் பலர் முகக் கவசம் அணியாமல் இருப்பது கவலை அளிக்கிறது. பொதுமுடக்க காலத்தில் ஏழைகளில் ஒருவர்கூட பசியால் வாடக்கூடாது. அதை கருத்தில் கொண்டே 3 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, நவம்பர் வரை மேலும் 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ கடலை பருப்பு என்ற கணக்கில் அவை தரப்படும். அதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இதன் மூலம் நாட்டின் 80 கோடி மக்கள் பயனடைவார்கள். சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்.
ஏழைகள் மேம்பாட்டுக்காக ஏற்கனவே ரூ1.75 கோடி திட்டத்தை அறிவித்துள்ளோம். சட்டம், விதிமுறைகளுக்கு மேலானவர்கள் யாரும் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விவசாயிகளுக்கும், வரி செலுத்துவோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பருவநிலை காலத்தில் விவசாயத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி பேசினார்.