புதுடெல்லி:
மிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பாக பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த ஆளுநர், மாலை 7 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.

தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ஆளுநர், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதன்பிறகு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஆளுநரை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சந்தித்துப் பேசினார். மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகனும் நேரில் சந்தித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு எடுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கினார்.

தொடர்ந்து பிரதமருடனான சந்திப்பில் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பாகவும், முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சந்தித்தபோது, தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சரும் கூடுதல் தடுப்பூசி ஒதுக்குவதாக அவரிடம் உறுதியளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.