இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தையு வெளியிட்டார்.
இந்தியா – ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளையும், நாளை மறுநாளும் நடைக்கிறது. இதைபோல 14வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக டில்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று தாய்லாந்து சென்றார். இன்று பிற்பகல் பாங்காக் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்தின் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாக தலைநகர் பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும், குருநானக்கின் 550வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் சுவாஸ்தி பி.எம் மோடி என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மக்களிடையே தமிழில் வணக்கம் கூறி பேசிய அவர், “இந்தியா – தாய்லாந்து இடையே நிலவும் சிறந்த நட்புறவை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் ஒரு அந்நிய தேசத்தில் இருப்பதாக உணரவில்லை. இங்குள்ள சுற்றுப்புறம், உடை என எல்லைவற்றையும் பார்க்கும் தாய்லாந்தில் இருப்பது, எனது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. இந்தியாவுடன் தாய்லாந்து அரச குடும்பத்தினருக்கு இருக்கும் உறவு, இருநாடுகள் இடையேயான வரலாற்று ரீதியிலான உறவுகளையும், ஆழ்ந்த நட்புறவையும் வெளிப்படுத்துகிறது. இரு நாடுகளும் பொதுவான சிந்தனை உடையவை. நாங்கள் ஒருவருக்கொருவர் மொழியின் அடிப்படையில் மட்டுமல்ல, உணர்வுகளிலும் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். இந்தியா மற்றும் தாய்லாந்து உறவு எந்தவொரு குறிப்பிட்ட அரசாங்கத்தினாலும் ஆனது அல்ல. இந்த உறவுக்கு எந்த ஒரு அரசாங்கமும் வரவு வைக்க முடியாது. கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கிடையில் பகிரப்பட்ட ஒவ்வொரு கணமும், இந்த உறவை உருவாக்கி பலப்படுத்தியுள்ளது. நீங்கள் என்னிடம் சுவாஸ்தி மோடி என்று சொன்னீர்கள், இதற்கும் சமஸ்கிருத வார்த்தையான ‘ஸ்வஸ்தி’ அதாவது நலன்புரி என்கிற வார்த்தை உடன் தொடர்புள்ளது. இந்நாட்டு இளவரசி சமஸ்கிருத மொழியில் நிபுணர் மற்றும் கலாச்சாரத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.
இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 130 கோடி இந்தியர்கள் ஓன்று சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறோம். இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் என்னை மீண்டும் பிரதமராக்கி உள்ளனர். 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வரலாற்றில் முதல்முறையாக 60 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதில், அதிகமாக பெண்கள் வாக்களித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தில் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்கது. அதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். ஒருசிலர் நான் பிரதமர் ஆக விரும்பவில்லை. ஆனாலும், யார் நாட்டுக்காக உழைப்பவர்கள் என்று அறிந்த பெரும்பாலானோர் என்னை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளனர்.
காஷ்மீரில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர பாடுபடுவோம். இந்தியாவில் பெண்கள் சிரமமின்றி, புகையில்லாத சமையல் செய்வதற்கு 8 கோடிக்கும் மேலாக இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். அனைத்து இந்தியர்களுக்கும் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய கடின உழைப்புக்கும், பங்களிப்புக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் தாய்லாந்து உணர்வுபூர்வமாக இணைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
தனது பேச்சின் இடையில் “தாளாற்றி தந்த பொருளெல்லாம் தர்க்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு” என்கிற குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி, தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே என்று அதன் பொருளை விளக்கியபோது, அங்கு கூடியிருந்த மக்கள் மோடி, மோடி என்று ஆர்ப்பரித்தனர்.
நாளை நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்று பேசும் பிரதமர் மோடி, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டை ஏற்படுத்துவது தொடர்பான உச்சி மாநாட்டிலும், 14வது கிழக்காசிய உச்சி மாநாட்டிலும் கலந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.