வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி சொந்தமாக உப்பு தயாரித்ததை நினைவுகூரும் வகையில் உப்பு சத்தியாகிரகம் அருங்காட்சியகத்தை தண்டியில் மோடி திறந்து வைத்தார்.

modi

சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் உப்புக்கு தனியாக வரி விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடல்நீரில் இருந்து சொந்தமாக உப்பு தயாரிக்கும் விதமாக உப்பு சத்யாகிரக போராட்டத்தை மகாத்மா காந்தி முன்னெடுத்தார்.

அதன்படி 1930ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை நோக்கி சுமார் 241மைல் தூரத்திற்கு காந்தியடிகள் பாத யாத்திரை மேற்கொண்டார். தண்டியாத்திரையில் காந்தியடிகளுடன் 80பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உப்புக்கு வரிவிதிக்கப்பட்டதை எதிர்த்து காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியதை நினைவு கூறும் வகையில் தண்டி நகரில் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். காந்தியின் 71வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் இந்த உப்பு சத்யாகிரக அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்த நினைவகத்தில் காந்தியுடன் உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்று நடைபயணம் மேற்கொண்ட 80 பேரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

1930ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை 24 நாட்கள் நடைபெற்ற உப்பு சத்யாகிரகத்தை விளக்கும் விதமாக அருங்காட்சியகத்தில் 24 சுவரோவியங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.